சமையல் கத்துக்கலாம்

பேரிச்சம்பழ கேக்


பேரிச்சம்பழத்தை பயன்படுத்தி முட்டையில்லாமல் செய்யக்கூடிய சத்தான கேக் இது.
தேவையான பொருட்கள்
  • பேரிச்சம்பழம்   -  20 (விதை நீக்கப்பட்டது )
  • மைதா   -  1 கப்
  • பால்  -  3 /4 கப்
  • சர்க்கரை  -  3 /4 கப்
  • சமையல் சோடா  – 1 தேக்கரண்டி
  • எண்ணெய்  -  1 /2 கப்
  • அக்ஹ்ராட்,முந்திரி  -  1 மேசைக்கரண்டி
செய்முறை
  1. பேரிச்சம்பழத்தை பாலில் 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்(விதை நீக்கப்பட்டபேரிச்சம்பழம்).
  2. வெதுவெதுப்பான பாலில் பேரிச்சம்பழத்தை விதை நீக்கிவிட்டு  இரவு முழுவதும் ஊற வைக்கவும்(விதையுடன் கூடிய பேரிச்சம்பழம் ).
  3. இதனுடன்  சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  4. இதனுடன் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  5. மைதா, சமையல் சோடா இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளவும்.
  6. ஒவ்வொரு மேசைகரண்டி மாவு  எடுத்து  அரைத்தவற்றுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  7. இறுதியாக அக்ஹ்ராட்,முந்திரி ஆகியவற்றை கலந்து கொள்ளவும்.
  8. பேக்கிங் பானில் கலவையை ஊற்றி பரப்பவும்.
  9. அவனை 350 F இல்முன்சூடு பண்ணவும்.
  10. பின்னர் இதை 350 Fஇல் 35 – 40 நிமிடங்களுக்கு பேக் செய்யவும் அல்லது கத்தியை கேக்கில் நுழைக்கும் போது கத்தியில் கேக் ஒட்டாமல் வர வேண்டும்.

 

 

பூந்தி லட்டு


சுவையான பூந்தி லட்டு செய்வதற்கான எளிய குறிப்பு.
தேவையான பொருட்கள்
  • கடலை மாவு – 2  கப்
  • சர்க்கரை – 3 கப்
  • முந்திரிப்பருப்பு – 15
  • உலர் திராட்சை – 15
  • ஏலக்காய் – 4
  • கிராம்பு – 3
  • சர்க்கரைப் பாகு தயாரிக்க தண்ணீர் – 3  கப்
  • பூந்தி தயாரிக்க தண்ணீர் – 1 1 /2  – 2  கப்
  • நெய் – 4  தேக்கரண்டி
  • எண்ணெய்- பொரிக்க
செய்முறை
மாவு தயாரிக்கும் முறை
கடலை மாவை 1 1 /2  – 2  கப்  கப் தண்ணீரில் கட்டி இல்லாமல் நன்கு கரைத்துக் கொள்ளவும். மாவு தண்ணியாக இருக்க வேண்டும். கெட்டியாக இருக்கக் கூடாது.
வறுக்க வேண்டியவை
கடாயில் 2  தேக்கரண்டி நெய் ஊற்றி சூடு செய்யவும். அதில் உலர் திராட்சை, முந்திரிப்பருப்பு, ஏலக்காய், கிராம்பு சேர்த்து முந்திரிப்பருப்பு லேசாக நிறம் மாறும் வரை வதக்கவும்.
சர்க்கரை பாகு தயாரிக்கும் முறை
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் 3 கப் தண்ணீர் சேர்த்து சூடு செய்யவும். சர்க்கரை தண்ணீரில் நன்றாகக் கரைந்து, பாகு இரண்டு விரல்களுக்கிடையில் ஒட்டும் வரை கொதிக்க விடவும்.
பூந்தி தயாரிக்கும் முறை
  1. கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும். பூந்தி தேய்க்கும் கரண்டியில் மாவை சிறிது எடுத்து ஊற்றி மற்றொரு கரண்டியால் அழுத்தி தேய்த்து சமமாக விழுமாறு செய்யவும். பூந்தியை மொறு மொறுப்பாக வேக விட வேண்டாம். பூந்தி மிருதுவாக இருக்க வேண்டும்.
  2. கரண்டியால் பொரித்த பூண்டியை எடுத்து சர்க்கரைப் பாகில் போடவும். இதே போல் மீதி இருக்கும் மாவு முழுவதையும் பூந்தியாக பொரித்து எடுக்கவும்.
லட்டு தயாரிக்கும் முறை
  1. சர்க்கரைப் பாகு, பூந்தி, 2  தேக்கரண்டி நெய் அனைத்தையும் ஒன்றாகச் சேர்க்கவும். இறுதியாக வறுத்த முந்திரி, திராட்சை, கிராம்பு அனைத்தையும் இதனுடன் சேர்த்து, பாகு வெது வெதுப்பாக இருக்கும்போதே உருண்டை பிடிக்கவும்.
  2. சுவையான பூந்தி லட்டு தயார்.

 

 

பைனாப்பிள் கேசரி


சுவையான பைனாப்பிள் கேசரி செய்வதற்கான எளிய குறிப்பு.
தேவையான பொருட்கள்
  • வெள்ளை ரவை – 1  கப்
  • பைனாப்பிள் – 1 கப்
  • நெய் – 1 /2 கப்
  • சர்க்கரை – 1 1 /2 – 2  கப்
  • தண்ணீர் – 3  – 3 1 /2 கப்
  • ஏலக்காய்தூள் – சிறிது
  • பைனாப்பிள் எசன்ஸ் – சிறிது
  • முந்திரிபருப்பு , பாதாம், பிஸ்தா – சில
செய்முறை
  1. ஒரு அடி கனமான பாத்திரத்தில் 2  மேசைக்கரண்டி நெய் ஊற்றி சூடு செய்யவும்.
  2. ரவையை அதில் சேர்த்து லேசாக நிறம் மாறும் வரை வதக்கி தனியே வைக்கவும்.
  3. அதே கடையில் 2  மேசைக்கரண்டி நெய் ஊற்றி முந்திரி, பாதாம், பிஸ்தா ஆகியவற்றை லேசாக பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ளவும். கடாயில் இருந்து வெளியே எடுத்து சிறு சிறு துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும்.
  4. அதே பாத்திரத்தில் தண்ணீர்( 3  – 3 1 /2 கப் ) ஊற்றி 5  நிமிடங்கள் சூடு செய்யவும். பின் அதில் பைனாப்பிள் துண்டுகள், சிறிது  கேசரி பவுடர் சேர்த்து வேக விடவும்.
  5. வெந்ததும், ரவையை சிறிது சிறிதாகச் சேர்த்து கட்டிகள் விழாமல் கிளறிக் கொண்டேயிருக்க வேண்டும்.
  6. ரவை வெந்ததும், அதனுடன் சர்க்கரை சேர்த்து கிளறிக் கொண்டேயிருக்கவும்.
  7. கடைசியாக மீதமுள்ள நெய், பைனாப்பிள் எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.
  8. இறுதியாக வறுத்து, உடைத்து வைத்துள்ள அனைத்து பருப்புகளையும் சேர்த்து பரிமாறவும்.

 

 

ரசகுல்லா


சுவையான ரசகுல்லா செய்வதற்கான எளிய குறிப்பு.
தேவையான பொருட்கள்
பனீர் தயாரிக்க
  • பால் – 6  கப்
  • எலுமிச்சம்பழசாறு – 1  – 2  மேசைக்கரண்டி
  • பாகு தயாரிக்க
  • சர்க்கரை – 1  கப்
  • தண்ணீர் – 2  – 2 1 /2 கப்
  • ஏலக்காய்த்தூள் – 1 /4 தேக்கரண்டி
செய்முறை
  1. ஒரு அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி சூடு செய்யவும். பால் நன்கு சூடானதும் அதில் எலுமிச்சம்பழசாறு சேர்க்கவும். கரண்டியால் நன்கு கலக்கி விடவும்.
  2. பால் முழுக்க திரிந்தவுடன் அதிலிருந்த மஞ்சள் நிறமான நீர் பிரியும்.அப்போது அனலிளிருந்து இறக்கி விடவும்.
  3. கொஞ்ச நேரம் ஆறவைத்து, மெல்லிய துணிகொண்டு வடிகட்டவும். துணியை தண்ணீர் வடியும் மட்டும் தொங்கவிடவும். பிழிய வேண்டாம்.
  4. பனீர் இப்போது ரெடி. அதை ஒரு தட்டில் கொட்டி கைகளால் நன்கு அழுத்தி பிசைந்து பெரிய உருண்டையாக உருட்டிக் கொள்ளவும்.
  5. அதிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பனீர் உருண்டைகள் வெந்த பிறகு அதன் உருவம் இரு மடங்காகும். அதனால் சிறு உருண்டைகளாக அழுத்தி உருட்டிக் கொள்ளவும்.
  6. அழுத்தி உருட்ட விட்டால் உருண்டைகள் உடைந்து விடும்.
  7. ஒரு பெரிய பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் இரண்டையும் கலந்து சூடு செய்யவும். சர்க்கரை முழுவதும் கரைந்து கொதிக்க ஆரம்பித்தவுடன், மெதுவாக பனீர் உருண்டைகளை பாகில் சேர்க்கவும்.
  8. பனீர் உருண்டைகள் 2 – 3 மடங்கு வரை பெரிதாகும். அதனால் பெரிய பாத்திரத்தை உபயோகிக்கவும். 25  நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.பனீர் வெந்திருந்தால் அதன் உருவம் இரு மடங்காயிருக்கும்.
  9. ஒரு ரசகுல்லாவை வெளியே எடுத்து லேசாக அமிழ்த்தினால், அதன் பழைய உருவத்திற்கே வந்து விட வேண்டும்.
  10. கடைசியாக ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். குளிர வைத்துப் பரிமாறவும்.

 

 

சீரக-மிளகு ரசம்


தேவையான பொருட்கள்
  • பூண்டு  -  3 பல்
  • சீரகம்  -  1 1 / 4   தேக்கரண்டி
  • மிளகு  – 1 / 2  தேக்கரண்டி
  • வர கொத்தமல்லி  -  1 / 2 தேக்கரண்டி
  • வர மிளகாய்  – 1
  • மஞ்சள் தூள்  -  1 /4  தேக்கரண்டி
  • தக்காளி  – 1 /2
  • உப்பு  -  தேவையான அளவு
  • கொத்தமல்லி தழை  – சிறிது
  • கடுகு  -  1 /2  தேக்கரண்டி
  • கருவேப்பிலை  – சிறிது
  • பெருங்காயத்தூள்   -  1 /4  தேக்கரண்டி
  • நெய்  அல்லது எண்ணெய்  – 1 தேக்கரண்டி
செய்முறை
  1. சீரகம், மிளகு, கொத்தமல்லி ஆகியவற்றை  தண்ணீர் ஊற்றாமல் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  2. பூண்டை நசுக்கி வைத்துக் கொள்ளவும்.வரமிளகாயை இரண்டாக கிள்ளிக் கொள்ளவும்.
  3. புளியுடன், தக்காளியும் சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ளவும் அல்லது தக்காளியை பொடியாக நறுக்கி தாளிக்கும்போது சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  4. கடாயில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை தாளித்து, வரமிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்.
  5. பூண்டு வதங்கிய பின்னர் தக்காளி சேர்த்து நன்றாக மசியும் வரை வதக்கவும்.
  6. பின் ,பெருங்காயத்தூள், அரைத்த பொடியை சேர்த்து வதக்கவும்.
  7. இப்பொழுது கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரை ஊற்றி, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்க்கவும்.
  8. ரசம் நுரைத்து பொங்கி வரும்போது  கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

 

தக்காளி ரசம்


தென்னிந்திய சமையல்களில் பெரும் பங்கு வைப்பது ரசம். ரசம் ஜீரண சக்தியை எளிதாக்குகிறது. ரசம்
செய்யும்போது ரச பொடியை புதிதாக தயாரித்தால் ரசத்தின் சுவை கூடும். மிக அதிக நேரம் ரசத்தை
கொதிக்க வைக்கக் கூடாது.எளிய முறையில் தக்காளி ரசம் செய்வதற்கான சமையல் குறிப்பு.
தேவையான பொருட்கள்
  • தக்காளி  நடுத்தரமானது – 2
  • புளி விழுது  – 1  தேக்கரண்டி
  • மல்லிதழை  – சிறிது
  • தண்ணீர்  – 4  – 5  கப்
ரச பொடிக்கு
  • மிளகு  – 1  தேக்கரண்டி
  • சீரகம்  – 1  தேக்கரண்டி
  • பூண்டு  – 4 -5  பல் ( தோலை நீக்க வேண்டாம்)
தாளிக்க
  • வர மிளகாய்  – 2
  • கருவேப்பிலை  – சிறிது
  • கடுகு  – 1  தேக்கரண்டி
  • சீரகம் – 1  தேக்கரண்டி
  • பெருங்காயம்  – சிறிது
செய்முறை
  1. தக்காளியை சிறுதுண்டுகளாக நறுக்கி, புளியுடன் சேர்த்து மசித்துக்  கொள்ளவும். தேவையான அளவு உப்பை புளித்தண்ணீரில் சேர்த்துக் கொள்ளவும்.
  2. முன்பே தயாரித்து வைத்திருக்கும் ரச பொடியை உபயோகப்படுத்த வேண்டாம். புதியதாக தயாரித்தால்தான் சுவை அதிகம்.
  3. ரச பொடிக்கு கொடுத்துள்ள பொருட்களை ஒன்றிரண்டாக அடித்துக்  கொள்ளவும். தூள் செய்ய வேண்டாம்.
  4. கடாயில் 1  தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும். கடுகு, சீரகம், கருவேப்பிலை, பெருங்காயம் , இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
  5. கடுகு வெடித்ததும், கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். கொதி வந்ததும் அரைத்து வைத்துள்ள ரச பொடியை சேர்த்து கொதிக்க விடவும்.
  6. நிறைய நேரம் ரசத்தை கொதிக்க வைக்க வேண்டியதில்லை. அடுப்பை அணைத்த பிறகு, மல்லிதழை தூவி, பரிமாறும் பாத்திரத்திற்கு உடனே மாற்றி விடவும்.
  7. கடாயிலேயே வைத்திருந்தால் ரசம் அதனுடைய சுவையை இழந்து விடும்.

 

 

பூரி, உருளைக்கிழங்கு மசாலா


சுவையான பூரி, உருளைக்கிழங்கு மசாலா செய்வதற்கான எளிய குறிப்பு.
தேவையான பொருட்கள்
  • கோதுமை மாவு – 2  கப்
  • தண்ணீர் – 1/4 – 1 /2 கப்
  • உப்பு – 1 /2 தேக்கரண்டி
  • எண்ணெய்
மசாலா தயாரிக்க
  • உருளைக்கிழங்கு – 3
  • பெரிய வெங்காயம் – 1
  • பச்சை மிளகாய் – 4
  • இஞ்சி, பூண்டு விழுது – 1  தேக்கரண்டி
  • மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி
  • கடுகு – 1 /2 தேக்கரண்டி
  • கருவேப்பிலை – சிறிது
  • உப்பு
பூரி செய்முறை
  1. கோதுமை மாவை ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் 2  தேக்கரண்டி எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  2. பின் தண்ணீர் சேர்த்து கெட்டியாக நன்கு பிசைந்து கொள்ளவும். சப்பாத்தி மாவு பதத்தை விட கெட்டியாக இருக்க வேண்டும்.
  3. பிசைந்தவுடன் உடனடியாக பூரி செய்ய வேண்டும். அதிக எண்ணெய் இல்லாமல் பூரி செய்ய வேண்டும் எனில், மாவு பிசைந்தவுடன் பூரி போட வேண்டும்.
  4. சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பூரி கட்டையை பயன்படுத்தி தட்டையாக, சிறிது தடிமனாக தேய்த்துக் கொள்ளவும்.
  5. பூரி சிறிது தடிமனாக இருக்க வேண்டும். மெல்லிசாக இருக்கக் கூடாது.
  6. பூரி பொரிப்பதற்கு தேவையான எண்ணையை கடாயில் ஊற்றி சூடு செய்யவும்.எண்ணெய் சூடானதும், பூரியை போடவும்.
  7. பூரி அடியில் இருந்து மேலே வரும் போது, பூரியை கரண்டியால் எண்ணைக்குள் அமிழ்த்தினால்  பூரி உருண்டையாக வரும்.
  8. பூரியை மறுபுறம் திருப்பி லேசாக பொன்னிறமானதும் எடுத்து விடவும்.
மசாலா செய்முறை
  1. உருளைக்கிழங்கு தோலை சீவி விட்டு, 3 அல்லது 4 துண்டுகளாக நறுக்கி குக்கரில் போட்டு 3 விசில்கள் வரை வேக விடவும்.
  2. வேக வைத்த உருளைகிழங்கை லேசாக மசித்துக் கொள்ளவும்.
  3. வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
  4. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளிக்கவும். கடுகு வெடித்ததும் கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  5. பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  6. பின் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு,மஞ்சள்தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து மூடி போட்டு இரண்டு நிமிடங்கள் வேக வைக்கவும்.
குறிப்பு
அதிக மசால் வேண்டும் எனில் கடலை மாவை தண்ணீரில் கரைத்து மசாலில் ஊற்றி கொதிக்க விடவும் அல்லது பொட்டுக்கடலையை அரைத்து, மசாலில் ஊற்றி கொதிக்க விடவும்.

 

 

உருளைக்கிழங்கு பொரியல்


தேவையான பொருட்கள்
  • உருளைக்கிழங்கு   -  1 / 4  கிலோ
  • பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது  -  1 / 4  கப்
  • பச்சை மிளகாய்  -  2
  • மிளகாய்தூள்  – 1 தேக்கரண்டி  (விருப்பத்திற்கேற்ப)
  • மஞ்சள்தூள்   – 1 /4 தேக்கரண்டி
  • கடுகு  – 1 /4  தேக்கரண்டி
  • உளுத்தம்பருப்பு   – 1 /4  தேக்கரண்டி
  • கறிவேப்பிலை  -  சிறிது
  • உப்பு
  • எண்ணெய்
செய்முறை
  1. உருளைகிழங்கை உப்பு சேர்த்து வேக வைத்து தோலுரித்துக் கொள்ளவும்.
  2. வேக வைத்த உருளைக்கிழங்கை நன்றாகப் பிசைந்து கொள்ளவும்..
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை  சேர்த்து தாளிக்கவும்.
  4. பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
  5. வெங்காயம் நிறம் மாறியதும், உருளைக்கிழங்கு, மஞ்சள்தூள் சேர்த்து  4 நிமிடங்கள் வதக்கி இறக்கவும்.
  6. விருப்பமெனில் சிறிது மிளகாய்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

 

கேரட் பொரியல்



கேரட் பொரியல் செய்வதற்கான எளிய சமையல் குறிப்பு.
தேவையான பொருட்கள்
  • கேரட் துருவியது  – 2 கப்
  • பாசிபருப்பு -  1 /4 கப்
  • பச்சை மிளகாய்  – 3
  • சின்ன வெங்காயம் – 5
  • கடுகு  – 1 தேக்கரண்டி
  • உளுத்தம்பருப்பு  – 1  தேக்கரண்டி
  • கருவேப்பிலை  – சிறிது
  • உப்பு  – தேவையான அளவு
  • எண்ணெய் -  2  தேக்கரண்டி
செய்முறை
  1. பாசிபருப்பை 15 -20  நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  2. வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும்.
  3. கடையில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளிக்கவும். கடுகு வெடித்ததும் உளுத்தம்பருப்பு சேர்த்து வதக்கவும்.
  4. பின் வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
  5. ஊற வைத்துள்ள பாசிபருப்பை தண்ணீர் வடித்து விட்டு சேர்த்து வதக்கவும். பின் கேரட் துருவல், உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து மூடி போட்டு  7  – 10  நிமிடங்கள் வேக விடவும்.

 

 

முருங்கைப்பூ பொரியல்


முருங்கைப்பூ பொரியல் கர்ப்பிணி பெண்களுக்கு ஒன்பதாவது மாதம் முதல் கொடுக்கலாம். வாயுத்தொல்லை நீங்கி சுகப்பிரசவம் ஆகும்.
தேவையான பொருட்கள்
  • முருங்கைப்பூ – 1 கப்
  • நல்லெண்ணெய் – 50 மில்லி
  • சீரகம் – கால் ஸ்பூன்
  • பூண்டு பல் – 10 ( பொடியாக நறுக்கவும்)
  • சின்ன வெங்காயம் – 100 கிராம் ( பொடியாக நறுக்கவும்)
  • நாட்டு முட்டை – 1
  • உப்பு – தேவைக்கு
செய்முறை
  1. முருங்கைப்பூவை அலசி வைக்கவும்.
  2. வாணலியில் எண்ணெய் விட்டு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் போட்டு தாளித்து, முருங்கைப்பூ போடவும், வதங்கியவுடன் நாட்டு முட்டை விட்டு வேக வைக்கவும். வெந்தவுடன் பிரட்டி விடவும்.
  3. முருங்கைப்பூ பொரியல் ரெடி.
  4. இதனை சாதத்துடன் சேர்த்து பரிமாறவும்.

 

தக்காளி தோசை


சுவையான தக்காளி தோசை செய்வதற்கான எளிய முறை.
தேவையான பொருட்கள்:
  • தக்காளி ( பெரியது)  -  3
  • பச்சரிசி – 1 கப்
  • இட்லி அரிசி – 1  கப்
  • உளுந்து  -  1 தேக்கரண்டி
  • வெந்தயம்  – 1 தேக்கரண்டி
  • சீரகம் – 1 / 2 தேக்கரண்டி
  • சின்ன வெங்காயம்  – 10
  • வரமிளகாய்  – 3
  • பூண்டு  – 2 பல்
  • கருவேப்பில்லை
  • உப்பு  – தேவையான அளவு
செய்முறை:
  1. பச்சரிசி, இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம்  இவை அனைத்தையும் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. இதனுடன் சீரகம், சின்ன வெங்காயம், வரமிளகாய், பூண்டு, கருவேப்பில்லை, உப்பு  சேர்த்து தோசைக்கு அரைக்கும் பதத்தில் அரைத்துக் கொள்ளவும்.
  3. அரைத்த மாவை குறைந்தது 10 மணி நேரம் புளிக்க வைக்கவும்.

 

தக்காளி ஊத்தாப்பம்


சுவையான தக்காளி ஊத்தாப்பம் செய்வதற்கான எளிய குறிப்பு.
தேவையான பொருட்கள்
  • பச்சரிசி – 1 /2 கப்
  • புழுங்கல் அரிசி – 1 /2 கப்
  • தக்காளி – 1 /4 கிலோ
  • ஊற வைத்த கடலைப்பருப்பு – 1  மேசைக்கரண்டி
  • பொடியாக அரிந்த வெங்காயம் – 1 /4 கப்
  • மல்லிதழை, கறிவேப்பிலை  – சிறிது
  • துருவிய தேங்காய், காரட் – விருப்பத்திற்கேற்ப
  • பச்சை மிளகாய் விழுது – 2  – 3  பச்சை மிளகாய்
  • உப்பு – தேவையான அளவு
செய்முறை
  1. அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  2. தக்காளியை ஜூஸ் செய்து, அரைத்த மாவில் கொட்டிக் கலக்கவும்.
  3. இதனுடன் ஊற வைத்த கடலைப்பருப்பு, பொடியாக அரிந்த வெங்காயம், மல்லிதழை, கறிவேப்பிலை, துருவிய தேங்காய், காரட் மற்றும் தேவையான அளவு உப்பு, பச்சை மிளகாய் விழுது  சேர்த்து 2  – 3  மணி நேரம் புளிக்க வைத்த பிறகு ஆப்பம் சுடவும்.

 

எலுமிச்சம்பழ ஊறுகாய்


சுவையான காரசாரமான எலுமிச்சம்பழ ஊறுகாய் செய்வதற்கான விரிவான செய்முறை குறிப்பு.
தேவையான பொருட்கள்
  • எலுமிச்சம்பழம் – 10 (மிருதுவான தோலுடையது)
  • கல் உப்பு – 1/4  கப்
  • மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி
  • காய்ந்த மிளகாய் – 5 – 8
  • நல்லெண்ணெய் – 1/4 லிட்டர்
  • பெருங்காயம் – 1 /2 தேக்கரண்டி
  • கடுகு – 1  தேக்கரண்டி
செய்முறை
  1. எலுமிச்சம்பழத்தில் 7  மட்டும் எடுத்து நடுத்தர துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மீதமுள்ள 3  பழத்தில் இருந்து ஜூஸ் மட்டும் பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
  2. ஒரு சுத்தமான பாத்திரத்தை எடுத்துக் கொண்டு முதலில் ஒரு அடுக்கு நறுக்கிய எலுமிச்சம்பழத்தை அடுக்கி, அதன் மேலே சிறிது மஞ்சள்தூள் மற்றும், உப்பு சேர்க்கவும். இதே போல் மீதமுள்ள பழங்களையும் அடுக்கிக் கொள்ளவும்.
  3. இதனுடன் பிழிந்து வைத்துள்ள ஜூஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதனை ஒரு சுத்தமான பாட்டிலுக்கு மாற்றி மூடி போட்டு வைக்கவும்.
  4. இதனை தினமும் ஒரு கரண்டியால் நன்கு கலக்கி விடவும். 3 -5 நாட்களுக்கு இதே போல் செய்யவும். 5 நாட்களுக்குப் பிறகு, எலுமிச்சம்பழ துண்டுகள் உப்பில் நன்கு ஊறி, மிகவும் மிருதுவாக இருக்கும்.
  5. கடாயில் 1/2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளவும். ஆறியதும் அரைத்துக் கொள்ளவும். இந்த மிளகாய்த்தூள் நன்கு தூளாகவும் இல்லாமல், மிகவும் கரகரப்பாகவும் இல்லாமல், இரண்டுக்குமிடையில் இருக்க வேண்டும்.
  6. அரைத்த மிளகாய்த்தூளை ஊறுகாயில் கலக்கவும்.
  7. மீதமுள்ள எண்ணையை கடாயில் ஊற்றி சூடு செய்து கடுகு, பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும். கடுகு வெடித்ததும், கலக்கி வைத்துள்ள ஊறுகாயைச் சேர்த்து நன்கு கலந்து அடுப்பை அணைக்கவும்.
  8. சூடு ஆறியதும், ஊறுகாயை ஒரு சுத்தமான ஜாடிக்கு மாற்றி விடவும். ஊறுகாயில் உள்ள எண்ணெய், ஊறுகாய்க்கு மேலே ஒரு இன்ச் அளவிற்கு அதிகமாக இருக்க வேண்டும்.
  9. இந்த முறையில் தயாரிக்கப்படும் ஊறுகாய் ஒரு வருடத்திற்கு கெடாமல் நன்றாக இருக்கும்.

 

சேமியா பிரியாணி


சேமியாவை பயன்படுத்தி ஒரு வித்தியாசமான எளிதாக சமைக்க கூடிய பிரியாணி.
தேவையான பொருட்கள்:
  • சேமியா – 200 கிராம்
  • தக்காளி – 2
  • பெரிய வெங்காயம் – 1
  • கேரட் – 25 கிராம்
  • பீன்ஸ் – 25 கிராம்
  • பட்டாணி – 25  கிராம்
  • இஞ்சி – சிறு துண்டு
  • பூண்டு – 1 பல்
  • பட்டை – 2  துண்டு
  • கிராம்பு – 3
  • கசகசா – 1/2  தேக்கரண்டி
செய்முறை
  1. சேமியாவை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
  2. இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, கசகசா முதலியவற்றை நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  3. வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு, வெங்காயம், கர்வேப்பிலை போட்டு தாளிக்கவும்.
  4. வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  5. இதனுடன் அரைத்து வைத்த மசாலாவைப் போட்டு வதக்கவும்.
  6. பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.பிறகு காரட், பீன்ஸ், பட்டாணி  மற்றும் தேவையான  அளவு  உப்பு ,தண்ணீர் சேர்த்து
  7. காய்களை முக்கால்வாசி வேகவிடவும்.
  8. 200 கிராம் சேமியாவுக்கு  400 கிராம் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
  9. தண்ணீர் கொதி வந்தவுடன் சேமியாவை அதில் கொட்டி கிளறி இறக்கவும்.

 

 

நெத்திலி வறுவல்

செட்டிநாடு முறையில் சுவையான நெத்திலி வறுவல் செய்வதற்கான குறிப்பு. இந்த குறிப்பு திரு.தாமோதரன்(செப்.தாமு) அவர்களின் செட்டிநாடு சமையல் குறிப்பைத் தழுவியது.
தேவையான பொருட்கள்
  • தலை, குடல் நீக்கிய நெத்திலி மீன் – 1 /2 கிலோ
  • மிளகாய்த்தூள் – 3  தேக்கரண்டி
  • தனியாத்தூள் – 4  தேக்கரண்டி
  • மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி
  • எலுமிச்சம்பழம் – 2  அல்லது புளி – ஒரு கோலி குண்டளவு
  • எண்ணெய் – 4  குழிக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு
  • கருவேப்பிலை – 2  கொத்து
  • இஞ்சி,பூண்டு விழுது அல்லது பூண்டு பொடித்தது – 1  தேக்கரண்டி
செய்முறை
  1. நெத்திலி மீனின் தலை மற்றும் குடல் பாகத்தை நீக்கி, மண் போக நன்கு சுத்தம் செய்ய ஒன்றுக்கு இரண்டு முறை தண்ணீரில் சிறிது கல் உப்பு சேர்த்து அலச வேண்டும்.
  2. பாத்திரத்தில் மிளகாய்த்தூள், தனியாத்தூள், அரைத்த பூண்டு, மஞ்சள்தூள், எலுமிச்சம்பழச்சாரு பிழிந்து தேவையான உப்பு சேர்த்து சுத்தம் செய்த நெத்திலியை அதில் சேர்த்து நன்கு பிசறி குறைந்தது 15 நிமிடம் ஊற விடவும்.
  3. கடாயில் 4 குழிக்கரண்டி எண்ணெய் விட்டு, சூடானதும், கறிவேப்பிலையை பொரித்து எடுத்த பிறகு, பிசறி வைத்துள்ள நெத்திலியைப் போட்டு மொறுமொறுவென்று பொரித்து எடுக்கவும்.
  4. பொரித்து வைத்துள்ள நெத்திலி மீன்களின் மேல் பொரித்து வைத்துள்ள கறிவேப்பிலையைத் தூவி பரிமாறவும்.
  5. இஞ்சி பூண்டு விழுதைத் தேவையெனில் பயன்படுத்தலாம் அல்லது பூண்டை மட்டும் அரைத்து பயன்படுத்தலாம்.

 

 

செட்டிநாடு மீன் வறுவல்


செட்டிநாடு செய்முறையில் தயாரிக்கப்படும் இந்த மீன் வறுவல் செய்வதற்கான குறிப்பு திரு.தாமோதரன்(செப்.தாமு) அவர்களின் செட்டிநாடு சமையல் குறிப்பைத் தழுவியது.
தேவையான பொருட்கள்
  • மீன் – 1 /2 கிலோ
  • மிளகாய்த்தூள் – 4  தேக்கரண்டி
  • தனியாத்தூள் – 5  தேக்கரண்டி
  • மஞ்சள்தூள் – 1  தேக்கரண்டி
  • எலுமிச்சம்பழம் – 1
  • மிளகு – 2  தேக்கரண்டி
  • காய்ந்த மிளகாய் – 4
  • கடுகு – 1  தேக்கரண்டி
  • கடலைப்பருப்பு – 3  தேக்கரண்டி
  • உளுத்தம்பருப்பு – 3 தேக்கரண்டி
  • கருவேப்பிலை – 2  கொத்து
  • எண்ணெய் – 1 1 /2 குழிக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு
செய்முறை
  1. மீனை சுத்தம் செய்து கழுவி வைத்துக் கொள்ளவும்.
  2. மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, எலுமிச்சம்பழச்சாறைப் பிழிந்து பேஸ்ட் போல செய்து கொண்டு, அதில் மீனை நன்கு ஊற வைத்துக் கொள்ளவும். குறைந்தது 1  மணி நேரமாவது ஊற வைக்கவும். இரவு முழுவதும் ஊற வைத்தால் நன்றாக இருக்கும்.
  3. மிளகு, காய்ந்த மிளகாய், கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை ஆகியவற்றை வாணலியில் தீயாமல் வறுத்து, ஆற வைத்து பொடி செய்து கொள்ளவும்.
  4. ஊற வைத்துள்ள மீனை இந்த அரைத்து வைத்துள்ள மசாலாவில் இரண்டு புறமும் பிரட்டி எடுத்து அடுப்பில் உள்ள தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு பொரித்தெடுக்கவும்.
  5. அடுப்பின் தணலைக் குறைவாகப் பயன்படுத்தினால் மசாலா நன்கு சேர்ந்து, மொறு மொறு, மீன் வறுவல் கிடைக்கும்.
  6. இந்த முறையில் தயாரிக்கப்படும் மீன் வறுவல் சாம்பார் சாதம், குருமா, தனியாக சாப்பிடவும் சுவையாக இருக்கும்.

 

ஐயங்கார் புளியோதரை


ஐயங்கார்  முறையில் புளியோதரை  செய்வதற்கான எளிய குறிப்பு.
தேவையான பொருட்கள்
  • அரிசி  – 1 கப்
  • புளி – பெரிய எலுமிச்சம் பழம் அளவு
  • காய்ந்த மிளகாய்  – 3
  • தனியா  – 1  தேக்கரண்டி
  • வெந்தயம் – 1 /4 தேக்கரண்டி
  • மிளகு  – 1 /2  தேக்கரண்டி
  • பெருங்காயம்  – ஒரு சிட்டிகை
  • மஞ்சள்தூள் – 1 /4 தேக்கரண்டி
  • நல்லெண்ணெய்  – 2  மேசைக்கரண்டி
  • கருவேப்பிலை  – 2 கொத்து
  • உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
  1. அரிசியை வேக வைத்து ஆற வைக்கவும்.
  2. இரண்டு கப் தண்ணீர் விட்டு புளியை ஊற வைத்து பின் சாறு எடுத்து வடிகட்டவும்.
  3. கடாயில் எண்ணெய் காய வைத்து கிள்ளிய காய்ந்த மிளகாயை சேர்த்து வதக்கவும்.
  4. பிறகு அதில் மஞ்சள்தூள், பெருங்காயம், புளிசாறு சேர்க்கவும்.
  5. புளிச்சாற்றைக் காய்ச்சி, அளவில் குறைத்து கெட்டியான குழம்பாக்கவும். கெட்டியானதும் அதில் மொறமொறப்பாக பொடியாக்கிய மிளகு, உப்பு சேர்க்கவும். அனலிளிருந்து இறக்கி ஆற வைக்கவும்.
  6. வெந்தயத்தையும், தனியாவையும் கொஞ்சம் எண்ணையில் வறுத்து பொடியாக்கிக் கொள்ளவும்.
  7. எல்லாவற்றையும் சாதத்தோடு சேர்த்து நன்றாகக் கலக்கி விடவும்.
  8. கொஞ்சம் எண்ணெயைச் சூடாக்கி கறிவேப்பிலை சேர்த்து சாதத்தில் கொட்டி கலக்கவும்.

 

முட்டை பிரியாணி


எளிய முறையில் முட்டை பிரியாணி செய்வதற்கான குறிப்பு.
தேவையான பொருட்கள்
  • முட்டை வேக வைத்தது  – 4
  • ஆம்லெட்டு செய்வதற்கு  முட்டை  – 2
  • பிரியாணி அரிசி  – 2  1 /2 கப்
  • வெங்காயம்  – 6
  • தக்காளி  -  3
  • பச்சை மிளகாய்  -  5
  • இஞ்சி  – ஒரு துண்டு
  • பூண்டு  – 6  பல்
  • தேங்காய் துருவியது  – 1 /2 கப்
  • கரம் மசாலா தூள்  – 1  தேக்கரண்டி
  • மிளகுத்தூள்  – 2  தேக்கரண்டி
  • பட்டை  – ஒரு துண்டு
  • ஏலக்காய்  – 2
  • கிராம்பு  – 2
  • நெய்  – 1 /4 கப்
  • தண்ணீர்  – 4 1 /2 கப்
  • தயிர்  – 2  மேசைக்கரண்டி
  • புதினா இலை  – 2  மேசைக்கரண்டி
  • கொத்தமல்லி இலை - 1 /2 கப்
செய்முறை
  1. அரிசியை 1 /2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. வேக வைத்துள்ள முட்டையின் தோலுரித்து வைக்கவும்.
  3. ஒரு வெங்காயம், 2  பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 2  முட்டை, நறுக்கிய வெங்காயம், வைத்து வைத்து ஆம்லெட் தயாரிக்கவும்.
  4. ஆம்லெட்டை  4  அல்லது 6  துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  5. 4 1 /2 கப் தண்ணீரை சூடு செய்யவும். அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் தேவையான உப்பு சேர்த்து அப்படியே வைக்கவும்.
  6. தேங்காயை, தயிருடன் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது சேர்த்து அடித்துக் கொள்ளவும்.
  7. இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், 1 /4 கப் மல்லி இலை ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  8. ஒரு பெரிய கடாயில் நெய் ஊற்றி சூடு செய்யவும். நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.  தக்காளி, மீதமுள்ள மல்லி இலை, புதினா இலை, மிளகுதூள் சேர்த்து வதக்கவும்.
  9. அடித்து வைத்துள்ள தேங்காய் – தயிர் விழுதைச் சேர்த்து நன்கு கலக்கவும். இதனுடன் கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
  10. வேக வைத்துள்ள முட்டையை 3  இடங்களில் லேசாகக் கீறி விடவும். முட்டையை மசாலாவில் சேர்த்து சில நிமிடங்கள் வேக வைக்கவும்.
  11. பின் ஆம்லெட் துண்டுகளைச் சேர்த்து கலக்கவும்.
  12. கொதிக்க வைத்திருந்த தண்ணீர், அரிசி சேர்த்து நன்கு கலந்து மூடி போட்டு மிதமான சூட்டில் வேக விடவும்.
  13. சிறு சிறு துளைகள் மேலே வரும்போது , 1  தேக்கரண்டி நெய் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
  14. சாதம் நன்றாக வேகும் வரை மூடி போட்டு வைக்கவும். 1 /2 மணி நேரம் கழித்து  திறந்து நன்றாக கலந்து விடவும்.

  

செட்டிநாடு சிக்கன் பிரியாணி

செட்டிநாடு முறையில் சுவையான சிக்கன் பிரியாணி செய்வதற்கான எளிய குறிப்பு. இந்த குறிப்பு திரு.தாமோதரன்(செப்.தாமு) அவர்களின் சமையல் குறிப்பைத் தழுவியது.
தேவையான பொருட்கள்
  • அரிசி – 1 /2 கிலோ
  • சிக்கன்(எலும்புடன்) – 1 /2 கிலோ
  • கொத்தமல்லி – 1 /2 கட்டு
  • புதினா – 1  கட்டு
  • பச்சை மிளகாய் – 4
  • வெங்காயம் – 250  கிராம்
  • தக்காளி – 250  கிராம்
  • இஞ்சி, பூண்டு விழுது – 50  கிராம்
  • தயிர் – 1 /2 ஆழாக்கு
  • எண்ணெய் – 1  குழிக்கரண்டி
  • ஏலக்காய் – 2
  • கடற்பாசி – 1 /2  தேக்கரண்டி
  • பட்டை, லவங்கம், மராட்டி மொக்கு, அன்னாசிப்பூ – தலா 2
  • மிளகாய்த்தூள் – 2  தேக்கரண்டி
  • மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி
  • தனியாத்தூள் – 4  தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு
செய்முறை
  1. ஒரு அடி கனமான அகலமான பாத்திரம் அல்லது குக்கரை அடுப்பில் வைத்து ஒரு குழிக்கரண்டி எண்ணெய் விட்டு மேலே கொடுக்கப்பட்டுள்ள கரம் மசாலா பொருட்களை(பட்டை, லவங்கம், மராட்டி மொக்கு, அன்னாசிப்பூ,ஏலக்காய்,கடற்பாசி) சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். வேண்டுமெனில் இந்த மசாலாப் பொருட்களை பொடி செய்தும் உபயோகிக்கலாம்.
  2. பின்னர் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின் தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.
  3. பின் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து, பச்சை வாசனை போகுமளவு நன்கு கிளறவும். பின்னர் கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.
  4. பிறகு நன்கு சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கன் சேர்த்து நன்றாக அதன் நிறம் மாறும் வரை கிளறவும். இதனுடன் சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக விடவும்.
  5. சிக்கன் பாதியளவு வெந்த பிறகு, பச்சைமிளகாயைச் சேர்க்கவும். திக்கான மசாலா கலவையுடன் சிக்கன் இருக்கும் போது, கழுவி வைத்துள்ள அரசியைச் சேர்த்து கலக்கவும்.
  6. ஒரு கப் அரிசிக்கு 1 1 /2 கப் தண்ணீர் சேர்த்து மூடி விடவும்.முக்கால் பதம் வெந்த நிலையில், மூடியத் திறந்து தயிரைச் சேர்த்து கிளறவும்.
  7. தோசைக்கல்லை அடுப்பில் வைத்து தண்ணீர் விட்டு முக்கால் பதம் வெந்த நிலையில் உள்ள பிரியாணியை பாத்திரத்துடன் அதன் மீது வைத்து நன்கு மூடி விடவும். அந்த மூடியின் மேல் தண்ணீருடன் உள்ள பாத்திரத்தை வைக்கவும்.
  8. பத்து நிமிடம் கழித்து மூடியத் திறந்து புதினா, கொத்தமல்லித்தழைகளை அதன் மேல் தூவி பரிமாறவும்.
  9. பரிமாறும் போது பொன்னிறமாக வதக்கி வைத்துள்ள வெங்காயத்தை மேலே தூவி பரிமாறவும்.
குறிப்பு
  1. சிக்கனைச் சிறிது சிறிதாக கோடு போட்டோ, அல்லது கீறியோ விட்டு செய்தால் மசாலா நன்கு உட்புறம் சார்ந்து சுவையாக இருக்கும்.
  2. தம்மில் போடும்போது தோசைக்கல்லில் தண்ணீர் ஆவியாகிவிட்டால் தண்ணீர் சேர்க்கவும், இல்லையென்றால் பாத்திரம் அடிப்பிடித்து விடும்.