Friday, May 6, 2011

”இஸ்லாமிய பயங்கரவாதம்” என்று லேபிள் ஒட்டுவதை ஏற்க முடியாது: கருணாநிதி!



சாமா பின் லேடன் பின்பற்றிய பயங்கரவாதத்திற்கு, "இஸ்லாமிய பயங்கரவாதம்” என்று லேபிள் ஒட்ட எத்தனிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து, முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக நாடுகளில் அதிர்வையும், அச்சத்தையும் ஏற்படுத்தி, உலக வல்லரசுகளில் ஒன்றான அமெரிக்காவுக்கே பெரும் சவாலாக இருந்து வந்த ஒசாமா பின் லேடன் எனும், உசாமா பின் முகமது பின் அவாத் பின் லேடனின் கதையை, 40 நிமிடங்களில் அமெரிக்க சிறப்புப் படை முடித்துவிட்டது.
ஆப்கானிஸ்தானில், சோவியத் படைகளுக்கு எதிராக கலகம் செய்ய வேண்டும் என்பதற்காகவே, தலிபான்களை அமெரிக்கா ஊக்குவித்தது. இன்றைக்கு அதே தலிபான்களை ஒடுக்குவதற்காக, ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவால் ஊக்குவிக்கப்பட்ட தலிபான்களுக்கு உதவுவதற்காகவே, பின் லேடன் ஆப்கானிஸ்தான் வந்தான் என்று சுட்டிக் காட்டுகின்றனர்.தேசிய பயங்கரவாதம், மத பயங்கரவாதம், இடதுசாரி தீவிரவாதம், வலதுசாரி பயங்கரவாதம், அரசையே அழிக்கும் பயங்கரவாதம், அணு பயங்கரவாதம், ரசாயன பயங்கரவாதம், நுண்ணுயிரியல் பயங்கரவாதம், போதை பயங்கரவாதம் என்று பயங்கரவாதம் எந்த உருவெடுக்க முனைந்தாலும் அதை கிள்ளியெறிய வேண்டும்.
ஒசாமாவின் ஆசிரியர் சொன்ன, "வரலாறு தனது வரிகளை ரத்தத்தால் தவிர வேறு எதனாலும் எழுதுவதில்லை. புகழ் எனும் உயர்ந்த மாளிகை, மண்டை ஓடுகளால் தவிர வேறு எதனாலும் கட்டப்படுவதில்லை. கவுரவத்துக்கும், மதிப்பிற்கும், உடைந்த எலும்புகளாலும், பிணங்களாலும் தவிர வேறு எதைக் கொண்டும் அடித்தளம் இடப்படுவதில்லை” என்ற போதனையை அப்படியே உணர்ச்சிப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு, அதை நிலை நிறுத்துவதற்கு வாழ்நாள் முழுவதும் முயற்சி செய்த ஒசாமா பின் லேடன் எடுத்த கருவி தான் பயங்கரவாதம். ஒசாமா பின்பற்றிய பயங்கரவாதத்திற்கு, "இஸ்லாமிய பயங்கரவாதம்” என்ற லேபிளை ஒட்ட எத்தனையோ பேர் எத்தனிக்கின்றனர். அதை ஏற்றுக்கொள்ள முடியாது. இஸ்லாம் என்ற சொல்லுக்கு மற்றொருபொருளே சமாதானம்.
எல்லா மதங்களிலிருந்தும் பயங்கரவாதிகள் உருவாவதை, சரித்திரம் சான்றுகளோடு காட்டுகிறது. தனிநபர்களையும், அப்பாவிகளையும் கொல்லும் பயங்கரவாதம் கண்டிக்கப்பட வேண்டும்; தண்டிக்கப்பட வேண்டும். இதில், யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. எந்தவித நியாயமான குறைகள் அல்லது கோபம் யார் மீது இருந்தபோதிலும், பயங்கரவாதத்தை நியாயப்படுத்துவதற்கு அடிப்படை அறவே இல்லை."கத்தியை கையில் எடுத்தவன்; கத்தியாலேயே அழிவான்” என்பது பழமொழி. அந்த பழமொழிக்கான பாடம் தான் ஒசாமா பின் லேடனின் வாழ்க்கை. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
நன்றி:இந்நேரம்.காம்

700 கோடியை நோக்கிச் செல்லும் உலக மக்கள் தொகை



    ரும் அக்டோபர்-31 ஆம் தேதியன்று உலக மக்கள் தொகை 700 கோடியாக இருக்கும் என்றும், கி.பி.2099 ஆம் ஆண்டுக்குள் அது 10 பில்லியனாக அதிகரிக்கும் என்றும் தற்போது வெளியாகியுள்ள ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
21 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலேயே உலக மக்கள் தொகை முந்தைய கணிப்பான 9.15 பில்லியனைத் தாண்டி 9.31 பில்லியனாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஹானியா ஜோல்ட்னிக் தலைமையில் அமைக்கப்பட்ட ஐநா குழுவின் கணிப்புப் படியே உலக மக்கள் தொகை 7 பில்லியனாக அக்டோபர்-31 அன்று இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதைத் தெரிவிக்கும் விதமாக ஐநா அமைப்பான UNFPA சார்பில் ஏழுநாள் கவுண்ட் டவுனை அக்டோபர் 24 ஆம் தேதி தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக மக்கள் தொகை கடந்த 1998 ஆம் ஆண்டு 6 பில்லியனைத் தொட்டது. அதே வருடம் ஜூலையில் 6.89 பில்லியனாக உயர்ந்தது.

கி.பி 2100 இல் சீன மக்கள் தொகை, தற்போதைய அளவான 1.34 இல் இருந்து 1 பில்லியனாக குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
நன்றி :இந்நேரம். காம்

Tuesday, May 3, 2011

ஒசாமா ...பிரபாகரன் ..,ஒரே மாதிரியான தலை வலி




ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது தொடர்பான தகவல்களை வாசிப்பதற்காக இணையத்தில் உலா வந்த போது பல்வேறு வகையான புதுமையான வாதங்களை காண நேரிட்ட்து.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டபோது எழுந்த விவாதம் போலவே, தற்போதைய சூழ்நிலையிலும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.


ஒசாமா கொலையை கண்டிக்கும் பல்வேறு வலைப்பதிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதற்கெல்லாம் காரணம் இல்லாமலும் இல்லை.

உலகின் பெரிய அண்ணன் தோரணையில் வலம் வந்து கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டிருந்த அமெரிக்காவிற்கு மரணபயம் காட்டும்விதமாக, அவர்களது ராணுவ தலைமையகத்தை தாக்கி,
"ஷாக் அட்டாக்" கொடுத்தவர் என்பதால் ஒசாமாவை போற்றுகின்றனர் சிலர்.

பல ஆயிரம் பேரை கொன்றவர் என்ற போர்வையில் ஒசாமா கொல்லப்படுகிறார் என்றால், பல்வேறு நாடுகளில் தனது
நாட்டாமை போர்வையில் அப்பாவி மக்களை அமெரிக்கா கொல்லுவது மட்டும் நியாயமா என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.

2001 செப்டம்பர் இரட்டை கோபுர கட்டடத்தின் மீதான தாக்குதலுக்கு பின் அமெரிக்கா
"பயங்கரவாததிற்கு எதிரான போர்கோலம்" பூண்டபின்
"இது குறிப்பிட்ட ஒரு மதத்துக்கு எதிரான போர் அல்ல" என்பதை அடிக்கடி சுட்டிக்காட்ட வேண்டிய அவசியமும், பயமும் அமெரிக்காவுக்கு இருந்தது.

முன்பு
சதாம் உசைன் தூக்கிலிடப்பட்டபோது ஜார்ஜ் புஷ், சொல்லிய அதே வார்த்தைகளைத்தான் இப்போது ஒசாமாவுக்காக, பாரக் ஒபாமா ஒப்பிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் இந்த விஷயத்தில் நன்றாக சிக்கிக்கொண்டிருப்பதாகவே தெரிகிறது. "இது அமெரிக்க- பாகிஸ்தான் ராணுவ
கூட்டு நடவடிக்கை அல்ல" என்று ஆசிப் அலி சர்தாரி சொல்வது கூட இதற்காகத்தான்.

உண்மையில் ஒசாமா இருப்பது பாகிஸ்தானுக்கு தெரியாது என்றால் இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்த்தியவர்கள் அங்கே பதுங்கியிருப்பதுவும் பாகிஸ்தான் அரசுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை தானே?


அமெரிக்க படைகள் ஒசாமாவை கொல்ல நேரடி நடவடிக்கையில் ஈடுபட்டதை அனுமதித்த பாகிஸ்தான், இந்தியாவை இதே போல களமிறங்க அனுமதிக்குமா?

ஒரு வேளை ஏதாவது ஒரு பாசத்திற்காக ஒசாமா தங்குவதற்கு பாகிஸ்தான் புகலிடம் அளித்திருந்தால், "தீவிரவாதத்தை ஒழிக்கிறேன்" என்று அமெரிக்காவிடம் கை நீட்டி வாங்கிய 19.5 பில்லியன் டாலர்கள் (ஒரு பில்லியன் = 100 கோடி) பாகிஸ்தானை பொறுத்தவரை துரோகத்திற்கான பணம் தானே?
ஒரு பக்கம் அமெரிக்காவிடம் பணம், இன்னொரு பக்கம் ஒசாமாவுக்கு அடைக்கலம். பாகிஸ்தானின் இந்த அழுகுணி ஆட்டம், தமிழர்களுக்கு எதிரான போரில் இலங்கையின் சிங்கள அரசு போட்ட இரட்டை வேடம் போல அல்லவா இருக்கிறது?

இலங்கை தமிழர்களின் மறுவாழ்வுக்கு என்று
இந்தியா கொடுத்த பணத்தை, தமிழர்களை ஒழிக்க பயன்படுத்திக்கொண்டது இலங்கை. இந்தியாவும் இந்த இரட்டை வேடத்தை ஒப்புக்கொண்டது போலவே
"கள்ளமௌனம்" காத்தது.

பிரபாகரன் கொல்லப்பட்டபோது இருந்த நிலையில் தான், இந்தியா ஒசாமா கொல்லப்பட்ட தற்போதும் இருப்பதாக தெரிகிறது. "இது பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் ஏற்பட்ட முன்னேற்றம்" என்று இப்போது கருத்து தெரிவித்து இருக்கும் இந்திய பிரதமர் அப்போது கொஞ்சம் அடக்கி வாசித்தார் அவ்வளவே. இந்தியாவில் பிரபாகரன் தேடப்படும் குற்றவாளி என்ற ரீதியில் மட்டும் அறிக்கை வாசித்து, ராஜபக்ஷேவுக்கான விசுவாசத்தை காட்டியது மட்டும் இந்தியாவின் நடந்தது.

பிரபாகரன் கொல்லப்பட்டபோது எழுந்த
"இது போட்டோகிராபிக்ஸ் மாயம்" என்ற சர்ச்சை இப்போதும் எழுந்திருக்கிறது.

பிரபாகரன் இன்னும்
உயிருடன் தான் இருக்கிறார் என்று நம்புபவர்கள் போலவே, இன்னும் ஒசாமா உயிருடன் தான் இருக்கிறார் என்று நம்புபவர்கள் இப்போதும் இருக்கிறார்கள்.
பிரபாகரனை வீழ்த்திவிட்டேன் என்று மார்தட்டியே தன்னுடைய அரசியல் செல்வாக்கினை உயர்த்திக்கொண்ட ராஜபக்ஷேவை போலவே, இனி அதலபாதளத்துக்கு போய்விட்ட தன்னுடைய செல்வாக்கினை ஒபாமா உயர்த்திக்கொள்வார் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

ஒபாமா கொல்லப்பட்டபின், பாரக் ஒபாமா வெளியிட்ட உரையினை கொஞ்சம் பாருங்கள். நம்முடைய தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் அறிக்கைகள் போலவே இருக்கும்.

பின்லேடனை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிக்க நான் உத்திரவிட்டேன். பின்லேடனை நீதியின் பின் நிறுத்த நான் முடிவு செய்தேன். இதெல்லாம் பாரக் ஒபாமா  உரையில் இருந்த வாசகங்கள்.
மூச்சுக்கு முன்னூறு தடவை நான்,நான்,நான்...

இதெல்லாம் விட ஹைலைட்டாக, "நாம் என்ன நினைக்கிறோமோ அதைச் செய்துகாட்டுவோம் என்பதை இப்போது மீண்டும் நிரூபித்துக்காட்டியுள்ளோம்" என்ற
பஞ்ச் டயலாக் வேறு.

இத்தனை விஷயங்களை மனம்போன போக்கில் யோசித்த போது புலப்பட்டது என்னவோ இது தான்.
"இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா என உலகம் முழுவதும் அரசியல்வாதிகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள்.மக்களும் நம்மைப்போலவே இருக்கிறார்கள் - தன் ரத்தத்தை உறிஞ்சும் அவர்களை ரசித்து பாராட்டியபடி"

Monday, May 2, 2011

இனிமேலாவது அமெரிக்கா திருந்துமா?


 

பாகிஸ்தானில் மறைவிடத்தில் வசித்துவந்த ஒசாமா பின்லேடன் அமெரிக்க தனிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டது, அமெரிக்க அரசையும் அமெரிக்கர்களையும் மிகப்பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  உலகம் முழுவதும் தீவிரவாதம் பரவிக் கிடப்பதால், இந்த வெற்றியை உலக நாடுகள் அனைத்தும் பாராட்டியிருக்கின்றன. தீவிரவாத அமைப்பான அல்காய்தா மீதான இந்த பலத்த அடி உலக அளவில் பரவிக் கிடக்கும் வெவ்வேறு தீவிரவாத அமைப்புகளுக்கும், பாண்டியன் பிரம்படிபோல, வலியை ஏற்படுத்தும் என்கிற எதிர்பார்ப்புதான் காரணம்.

மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள், குழந்தைகளைக் கொன்று குவித்த ஒரு தீவிரவாதியை இன்று கொன்றுவிட்டோம் என்று உலகுக்குச் செய்தி சொன்ன அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்தப் போர் முந்தைய அதிபர் கூறியதைப் போல இஸ்லாமியருக்கு எதிரான போர் அல்ல. இது இஸ்லாமியர்களையும் கொன்று தீர்த்தவனும் இஸ்லாமியர்களில் ஒருவனுமான தீவிரவாதிக்கு எதிரானது என்று கூறியிருக்கிறார்.


ஆனால், பின்லேடன் போன்ற ஒரு தீவிரவாதியை உருவாக்கியது அமெரிக்காவின் பணமும், அமெரிக்காவின் பேராசையும், ஆப்கனிஸ்தானில் அமெரிக்காவின் அத்துமீறலும்தான் என்பதையும் அவர் நினைவுகூர்ந்திருக்க வேண்டிய தருணம் இது. அமெரிக்காவால் உருவான தீவிரவாதம், அமெரிக்காவை மட்டுமல்ல, வளரும் நாடாகிய இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளையும் பாதித்துள்ளது. புதிய தீவிரவாதிகளை அல்காய்தா வளர்த்தெடுக்கும் நிலையையும் உருவாக்கியது. 

 இன்று தங்களால் வளர்க்கப்பட்ட முன்னாள் நண்பனான இந்நாள் எதிரியை அமெரிக்கா வீழ்த்தி இருக்கிறது. அவர்கள் கொண்டாடுகிறார்கள். இதில் ஒன்றை நாம் நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. அமெரிக்கா போன்ற வல்லரசுக்கே பின்லேடனைக் கொன்று பழிதீர்க்க பத்து ஆண்டுகள் ஆனது என்றால், இந்தியா போன்ற வளரும் நாடுகளால் இந்தத் தீவிரவாதிகளை எவ்வாறு எதிர்கொள்ள முடியும் என்பது நினைக்கவே வேதனை தருவதாக இருக்கிறது. 

அமெரிக்காவுக்கு வலிமை இருக்கிறது, பணம் இருக்கிறது, ஆகையால் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டவுடன் ஆப்கன் தேசத்துள் புகுந்து ஆட்சியை மாற்றிவிட்டு, தேடுதல் வேட்டையை நடத்த முடிகிறது. பாகிஸ்தானுக்கு ஆயிரமாயிரம் கோடி பணத்தை அள்ளிக் கொடுத்துக் கொண்டு, அவர்கள் பின் லேடனை தங்கள் பாதுகாப்பில் வைத்திருக்கிறார்கள் என்று தெரிந்தும், புன்னகையுடன் உறவாடவும், மிரட்டவும் முடிகிறது. இல்லையென்றால், பாகிஸ்தானுக்குள், அமெரிக்கா ஒரு தனிப்படையுடன் நுழைந்து, பின்லேடனைச் சுட்டுக் கொன்றுவிட்டு அமெரிக்காவுக்குத் திரும்ப முடியுமா? 


 மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு மூளையாகச் செயல்பட்ட நபர்களைப் பெயரைக் குறிப்பிட்டு பிடித்துக் கொடுங்கள் என்று கேட்டாலே, இந்தியாவை உதாசீனப்படுத்தும் பாகிஸ்தான், இதுவரை தனது நாட்டுக்குள் அமெரிக்காவின் ஒரு சிறிய தனிப்படை உள்ளே வந்து பின்லேடனைச் சுட்டுக் கொன்றுவிட்டுச் சென்றது பற்றி வாய்மூடி ஒரு வார்த்தை பேசாமல் மவுனியாக இருக்கிறதே, அதை என்னவென்று சொல்வது?   

இதுகுறித்து அமெரிக்க ராணுவ அதிகாரிகள் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தபோது, அந்த சிறிய தனிப்படை குறித்த கேள்விக்கு அவர்கள் அளித்த ஒரே பதில், இந்த நேரத்தில் அதைப் பற்றி எதுவும் சொல்ல முடியாது என்பதுதான். உங்கள் தாக்குதல் திட்டத்தை பாகிஸ்தானுக்குச் சொல்லிவிட்டு அங்கே போனால், பின்லேடனைத் தப்பிச்செல்ல விட்டுவிடுவார்கள் என்று கருதித்தான் நீங்கள் அவர்களிடம் சொல்லவில்லையா என்ற கேள்விக்கும் இந்த நேரத்தில் இதுபற்றி பேச வேண்டாம் என்பதுதான் அவர்களது பதில்.பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டதன் மூலம் முகம் கிழிந்து அம்பலப்பட்டிருப்பது பாகிஸ்தான். தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வருகிறது என்ற குற்றச் சாட்டை ஆயிரம் முறை மறுத்த பாகிஸ்தான் இனி எந்த முகத்தோடு மற்ற நாடுகளுடன் பேசும்? எத்தனை பொய்கள், என்னென்ன கதைகள்! அத்தனையும் இன்று அம்பலமாகிவிட்டது.


ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, மிகப் பெரிய மாளிகையில் சகோதரர் மற்றும் தனது இளம்மனைவி உள்ளிட்ட குடும்ப அங்கத்தினர்களுடன் இருப்பதை இத்தனை காலமும் கண்காணித்து, அது பின்லேடன்தான் என்பதை உறுதி செய்து 40 நிமிடத்தில் கதையை முடித்த அமெரிக்காவின் சாதனை பாராட்டுக்குரியதுதான். சுட்டுக்கொல்லப்பட்ட அடுத்த நிமிடம் இந்தத் தகவலை, அமெரிக்க அதிபர் தனது முந்தைய அதிபர்களான ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன் ஆகியோரிடம்தான் சொல்கிறார். அவர்கள் தேசத்தை ஒன்றாகப் பார்க்கிறார்கள். உலகம் முழுவதும் அமெரிக்கா அயோக்கியத்தனம் செய்கிறது என்று சொன்னாலும், இந்த அரசியல் பலம்தான் அவர்களது வெற்றிக்கு அடிப்படையாக இருக்கிறது. 

பாகிஸ்தான் சும்மா இருக்குமேயானால், இந்தியாவின் சிறியதொரு தனிப்படை அங்கே சென்று, மும்பைத் தாக்குதலில் 200 பேரைக் கொன்று குவித்தவர்களைப் பிடித்து, இந்தியாவுக்கு கொண்டுவரவும் முடியும். இந்திய ராணுவத்திடமும் புலனாய்வுப் பிரிவிடமும் அதற்கான திறமையும் இருக்கிறது. இந்தியாவுக்கு அரசியல் பலம்தான் இல்லை.   

  அமெரிக்கா செய்தால் அது சாதுர்யம், சாகசம், நியாயம். இந்தியாவோ, வேறொரு நாடோ செய்தால், அது அந்நிய நாட்டுக்குள் நடத்தப்பட்ட அத்துமீறல். ஒரு பயங்கரத் தீவிரவாதி கொல்லப்பட்டான் என்று மகிழ்ச்சியும் அடையலாம். வல்லரசுகளின் அதிகாரபூர்வமான தீவிரவாதம் அங்கீகரிக்கப்படுகிறதே என்று வருத்தமும் படலாம். அது, அவரவர் பார்வையைப் பொருத்தது! 


உதுமான் 

ஒரிஜினல் இதான்


வடிவேலுவின் ”லொஜக்” ”முஜக்” ”பஜக்” 

 இதக்கூட காப்பி பண்ணிறாங்கையா….?


காப்பி

ஒசாமாவுக்கு துப்பாக்கி சிகிட்சை

அருமையான துப்பாக்கி சிகிட்சை கொடுத்து இருக்கிறது ஒசாமாவுக்கு அமெரிக்க ராணுவம் வாழ்த்துக்கள் ..,

இருந்தாலும் பதற்றம் அதிகரிக்கிறது இதன் எதிர்வினையை  எண்ணி..,
ஒசாமா இன்னும்  நிறைய இருக்கிறார்கள்....

ஸாரி..உருவாக்கப்படுகிறார்கள்அமெரிக்கர்கள் இந்த சந்தோசத்தை கொண்டாடும் இவ்வேளையில் அமெரிக்கா கொண்டுள்ள சில வீணான காரியங்களை (ஏஹாதிபத்தியம்)  நிறுத்த வேண்டும் நாட்டாமை பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் மற்ற நாடுகளில்  பார்ப்பதை தன் நாட்டிலும் பார்க்கவேண்டும்   


இரட்டை கோபுர அழிவிற்கு 3000 பேரை கொன்ற ஒசாமா பயங்கரவாதி என்றால் அதை அல்லது அது போன்ற பலகாரணங்கள் சொல்லி மற்ற நாட்டு மக்கள் மீது போர் புரிந்து அங்குள்ள அப்பாவி மக்களும் சாக காரணமாயிருந்த அமெரிக்காவை எதில் சேர்ப்பது ? 


இந்திய போன்ற சிறந்த நாடுகள் அமெரிக்காவிற்கு ஜால்ரா போடுவதை நிறுத்திவிட்டு இது பற்றி சிறந்த முடிவை எடுப்பதன் மூலம் மட்டுமே பயங்கரவாதம் சிறிது கட்டுக்கு கொண்டு வரப்படும் என்பது என்னுடைய கருத்து ...,




அன்புடன் 
உதுமான் 


Sunday, May 1, 2011

குர்ஆன் அடிப்படையில் எகிப்தில் அரசாங்கம் - மக்கள் விருப்பம்





      நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும்
 சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 

புரட்சிக்கு பின்னான எகிப்து மக்களின் கண்ணோட்டத்தை
 பிரதிபலிக்கும் விதமாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
 பிரபல ப்யூ ஆய்வு நிறுவனத்தால் (Pew Research Center)
 ஏப்ரல் 25ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வறிக்கை
 பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 

எதிர்க்கால அரசில் மார்க்கம் சம்பந்தப்பட்ட கட்சிகள்
 இடம்பெற தங்களது தெளிவான ஆதரவை
 வழங்கியிருக்கின்றனர் எகிப்தியர்கள்.   

ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள சில தகவல்களை
 இங்கே காண்போம். முழுமையாக படிக்க
விரும்புபவர்கள் இந்த பதிவின் முடிவில்
 கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை சுட்டவும்.     

1. மார்க்க சட்டங்கள் அடிப்படையிலான அரசு: 

கண்டிப்பாக (Strictly) குர்ஆனை பின்பற்றியே
 சட்டங்கள் அமைய வேண்டுமென்று பெரும்பாலான
 எகிப்தியர்கள் (62%) கருத்து தெரிவித்துள்ளனர். 

எகிப்து மக்களின் இத்தகைய கருத்தில் வியப்பேதுமில்லை.
 புரட்சியின் போது, தஹ்ரிர் சதுக்கத்தில் இலட்சக்கணக்கில்
 திரண்டு, அங்கேயே அமைதியான முறையில் போராடி,
அங்கேயே தொழுது என்று பார்ப்போரை வியப்பில்
ஆழ்த்தி நம் ஈமானை அதிகப்படுத்தியவர்கள்
எகிப்தியர்கள். மார்க்க பற்று என்பது அவர்களது
 உள்ளங்களில் ஊறிய ஒன்று. ஆக, அவர்களது
இந்த விருப்பத்தில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.   

மேலும், குர்ஆனின் கோட்பாடுகளை பிரதிபலிக்குமாறு
சட்டங்கள் இருந்தால் போதுமானது என
சுமார் 27% மக்கள் கூறியிருக்கின்றனர்.

மிகக் குறைவான அளவில், ஐந்து சதவித மக்கள்,
 குரானை பின்பற்றி சட்டங்கள் அமையக்கூடாதென்று
 தெரிவித்துள்ளனர். எகிப்து மக்கள் தொகையில்
 குறிப்பிடத்தக்க அளவில் கிருத்துவர்கள்
 உள்ளனர் என்பது இங்கு நினைவுகூறத்தக்கது. 



2. எந்த இயக்கம் மக்களிடையே செல்வாக்கை
 பெற்றிருக்கின்றது?

முபாரக்கை பதவி இறக்கியதில் முக்கிய
 பங்காற்றிய முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கும்
(இந்த அமைப்பு குறித்து படிக்க <<இங்கே>> சுட்டவும்) ,
 "ஏப்ரல் 6" இயக்கத்திற்கும் எகிப்து
 மக்களிடையே பரவலான ஆதரவு காணப்படுகின்றது. 

நான்கில் மூன்று பேர் முஸ்லிம் சகோதரத்துவ
அமைப்பிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.
 பத்தில் ஏழு பேர் "ஏப்ரல் 6" இயக்கத்திற்கு ஆதரவாக
கருத்து தெரிவித்துள்ளனர்.        



தன்னுடைய செல்வாக்கை முஸ்லிம் சகோதரத்துவ
 அமைப்பு இழந்து விட்டதாக அரசியல் வல்லுனர்கள்
 கருதக்கூடிய நிலையில், அந்த அமைப்பிற்கான
 மக்கள் ஆதரவு பலரை வியப்பில் ஆழ்த்தியிருக்கும். 

3. அமெரிக்க ஆதரவு: 

தொடர்ந்து தன்னுடைய ஆதரவை எகிப்து மக்களிடையே
 இழந்து வருகின்றது அமெரிக்கா. பத்தில் எட்டு பேர்
 அமெரிக்கா குறித்து எதிர்மறையான கருத்துக்களை
கொண்டிருகின்றனர். 

2006 ஆம் ஆண்டு 69%மாக இருந்த அமெரிக்க
 ஆதரவின்மை கடந்த ஐந்தாண்டுகளில் 79%மாக
உயர்ந்துள்ளது.  



மிக குறைந்த அளவிலான (15%) எகிப்து மக்களே
 அமெரிக்காவுடனான நெருங்கிய தொடர்பை
விரும்புகின்றனர். அதுபோல, அமெரிக்க அதிபர்
 ஒபாமா குறித்தும் சாதகமாக எண்ணங்கள் எகிப்து
 மக்களிடையே இல்லை. 

4. இஸ்ரேலுடனான அமைதி ஒப்பந்தம்: 

இஸ்ரேலுடனான அமைதி ஒப்பந்தத்தை முடிவுக்கு
கொண்டு வர எகிப்து மக்கள் தயாராகி கொண்டிருப்பதாக
 ப்யூ ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது. 

எகிப்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான
 32 வருட கால அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்ய
 வேண்டுமென்று சுமார் 54% எகிப்தியர்கள்
 கூறியிருக்கின்றனர். ஒப்பந்தம் தொடரலாமென்று
 சுமார் 36% மக்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.  



நிச்சயமாக இது இஸ்ரேல் மற்றும் அதன் கூட்டணி
 நாடுகளுக்கு குறிப்பாக அமெரிக்காவிற்கு அதிர்ச்சியான
 தகவல். முபாரக்கின் வீழ்ச்சி இஸ்ரேலுக்கு மிகுந்த
வருத்தத்தை அளித்ததற்கு காரணம், அடுத்து
வரும் அரசாங்கம் தனக்கு ஆதரவாக செயல்படுமா
 என்பதுதான். குறிப்பாக முஸ்லிம் சகோதரத்துவ
அமைப்பு வரக்கூடாதென்பது இஸ்ரேலின் விருப்பம்.
 மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கும் விதமாக தேர்த
ல் முடிவுகள் இருந்தால் அது நிச்சயமாக
 இஸ்ரேலுக்கு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தும். 

5. அடுத்த அரசாங்கம்: 

அடுத்த அரசாங்கத்தை எந்த கட்சி வழி நடத்தி
 செல்லவேண்டுமென்ற கேள்விக்கு வெவ்வேறு
 வகையாக பதில்களை தந்துள்ளனர் எகிப்து மக்கள்.
 முதல் இரண்டு இடத்தில் "New Wafd" கட்சியும்,
 முஸ்லிம் சகோதரத்துவ இயக்கமும் உள்ளன. 



நாம் மேலே பார்த்தவை மட்டுமல்லாமல்,
 தாங்கள் ஜனநாயகத்தை விரும்புவதாகவும்,  எகிப்தின் 
தற்போதைய சூழ்நிலை திருப்திகரமாக இருப்பதாகவும்,
 வரக்கூடிய தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும்
 நடக்குமா என்ற சந்தேகம் உள்ளதாகவும் எகிப்து மக்கள்
தெரிவித்துள்ளனர்.

வரப்போகின்ற தேர்தல் நியாயமான முறையில்
 நடந்து, எகிப்து மக்கள் எண்ணப்படி ஆட்சி அமைந்து,
 எகிப்தின் பொருளாதாரம் உயர்ந்து மக்கள் மகிழ்ச்சியோடும்
அமைதியோடும் வாழ எல்லாம் வல்ல இறைவன்
உதவி புரிவானாக...ஆமீன். 

இந்த ஆய்வறிக்கையை முழுமையாக படிக்க
கீழ்காணும் சுட்டியை சுட்டவும். 

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன். 

Reference:
1. U.S. Wins No Friends, End of Treaty With Israel Sought, Egyptians
Embrace Revolt Leaders, Religious Parties and Military,
 As Well - Pew Global. link


எகிப்தில் புரட்சி வெடிக்க ஊழல் காரணம்: அப்துல் கலாம்




அமெரிக்காவின் சிகாகோ நகரில் முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு பொது வரவேற்பு நிகழ்ச்சியை, இந்திய - அமெரிக்க மையம் ஏற்பாடு செய்திருந்தது.

அதில் உரையாற்றிய அப்துல் கலாம்,  ‘’நாட்டில் ஊழலைத் தடுக்க வேண்டும். எகிப்து நாட்டில் புரட்சி வெடித்ததற்கு இது தான் காரணம். புதுமையான கருத்துக்களை அரசியலாக்கக் கூடாது.

வறுமையை ஒழிக்கவும், சுத்தமான குடிநீர் மற்றும் எரிசக்தி கிடைக்கச் செய்யவும், தரமான கல்வி கிடைக்கவும் நல்ல உலகத்தை படைக்க வேண்டும். அணு சக்தி தூய சக்தி தான். எனவே, இந்த சக்தியை உலகம் முழுவதும் பயன்படுத்தச் செய்ய வேண்டும்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9 சதவீதமாக உள்ளது. இன்னும் ஓராண்டில் இது 10 சதவீதத்தை எட்டி விடும். 2020ல் இந்தியா பொருளாதாரத்தில் வல்லமை படைத்த நாடாகி விடும். பார்லிமென்டில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கிடைக்கச் செய்ய வேண்டும்’’என்று பேசினார்.