Monday, March 28, 2011

பாகிஸ்தானை இந்திய அணி வீழ்த்தும் : இம்ரான் கான்!


 
உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் மோத உள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் இந்திய அணியே வெற்றி பெற வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் இம்ரான் கான் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
"பழைய வரலாறுகளை வைத்து யார் வெற்றிபெறுவார்கள் என்பதைத் தீர்மானிக்க முடியாது. சமீபத்திய ஆட்டங்களை வைத்துப் பார்க்கும்போது இந்திய அணிக்கே கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ளது. இதுவரை போட்டியை நடத்திய நாடுகள் கோப்பையை வென்றதில்லை. என்றாலும், இந்த முறை அதற்கான வாய்ப்புள்ளது. 
பாகிஸ்தான் கோப்பையை வெல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனாலும் இதுபோன்ற சிறந்த வாய்ப்பு இந்திய அணிக்குக் கிடைக்காது. சமீபத்திய சாதனைகளைப் பார்க்கும்போது இந்தியா பலம் வாய்ந்த அணியாகும். இந்திய அணிக்கு கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுபோன்ற வாய்ப்புகள் அரிதாகவே கிடைக்கும். இந்த வாய்ப்பு அடுத்த உலகக் கோப்பையில் கிடைப்பது கடினம். 
பாகிஸ்தானின் ஷாகித் அப்ரிதியுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் தோனியே சிறந்த கேப்டன். டெஸ்ட், ஒருநாள், இருபது ஓவர் என அனைத்து ஆட்டங்களுக்கும் இந்திய அணிக்கு அவரே கேப்டன். ஆனால் அப்ரிதி டெஸ்ட் போட்டிக்கு கேப்டன் கிடையாது. ஒருநாள் போட்டியைவிட டெஸ்ட் போட்டி நெருக்கடி மிகுந்தது. டெஸ்ட் கேப்டனாக இல்லாதபட்சத்தில் ஒருநாள் போட்டியில் நெருக்கடியைச் சமாளிப்பது கடினமாகும்" என்று கூறியுள்ளார்.

நன்றி :இந்நேரம் .காம்

No comments:

Post a Comment