Tuesday, April 19, 2011

தமிழக சட்டமன்றத்தேர்தல் 2011 ஒரு விரிவான அலசல்




Election Q தமிழக சட்டமன்றத்தேர்தல் 2011 ஒரு விரிவான அலசல்2011 சட்டமன்ற தேர்தல் பல வித சர்ச்சைகளுக்கிடையே நடைபெற்று முடிவிற்காக காத்து இருக்கிறது. “வரலாறு காணாத” என்ற வார்த்தை தமிழக ஊடகங்களிடையே ரொம்ப பிரபலமானது. ஒன்றுமில்லாத விசயத்திற்குக்கூட பரபரப்பிற்காக இதை பயன்படுத்துவார்கள் ஆனால் இந்த முறை உண்மையாகவே அதற்கு தகுந்த மாதிரி முதல் முறையாக 77.8% வாக்கு சதவீதம் நடைபெற்று அரசியல் கட்சிகளை மட்டுமல்ல அனைவரையும் ஏகத்திற்கும் குழப்பி விட்டு இருக்கிறது. பரபரப்பாக நடந்த தேர்தல் கலாட்டாக்களில் நான் கவனித்தவைகளை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
குறிப்பு: நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவன் அல்ல.
கலைஞர் Vs ஜெ
கடந்த பல தேர்தல்களாக இவர்களே மாறி மாறி வந்துள்ளனர். இந்த முறை கலைஞர் என்றால் அடுத்த முறை ஜெ இது தான் இது வரை நடந்துள்ளது. மக்களுக்கு வேறு சொல்லிக்கொள்ளும்படியான மாற்றுத்தலைவர் இல்லாததால் வேறு வழி இல்லாமல் இவர்கள் இவரையே மாற்றி மாற்றி தேர்வு செய்யவேண்டிய கட்டாயத்தில் இருப்பது ஒரு சோகமான நிகழ்வு.
இலவசம்
இலவசம் இந்தத்தேர்தலில் மிக முக்கிய இடம் பிடித்துள்ளது. இலவசம் என்பது (பொருட்களாக) முதலில் ஆரம்பிக்கப்பட்டது ஜெ ஆட்சியில் தான் என்று நினைக்கிறேன் (தவறு இருந்தால் சுட்டவும்) ஜெ பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் கொடுத்தது தான் ஆரம்பம். இது தேர்தலுக்காக இல்லாவிட்டாலும் மக்களிடையே தற்போதைய இலவச தாக்கத்தை போல பெரிய அளவில் ஏற்படுத்தாவிட்டாலும் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்று இருந்தது. ஜெ ஆட்சி முடியும் போது கூட பெரிய அளவில் எதிர்ப்பில்லை. இதனால் இதை சமாளிக்க கலைஞர் எடுத்த பிரம்மாஸ்திரம் தான் இலவச வண்ண தொலைக்காட்சி. கலைஞர் அறிவித்தாலும் ஜெ இது போல சென்ற தேர்தலில் குறிப்பிடும் படியாக எதையும் அறிவிக்கவில்லை. பிறகு பல இடங்களில் குறைந்த அளவு வாக்கு வித்தியாசத்தில் ஜெ தோற்று இன்று வரை மைனாரிட்டி திமுக அரசு என்று கூறிக்கொண்டு இருக்கிறார்.
இந்தத்தேர்தலிலும் கடந்த தேர்தலைப்போல எக்கச்சக்க இலவசங்களை தேர்தல் அறிக்கையாக கலைஞர் அறிவிக்க சென்ற முறை போல இந்த முறை எதுவும் கூறாமல் இருந்தால் பெரும் பாதிப்பு வரும் என்பதை உணர்ந்து ஜெ வும் வரைமுறையே இல்லாத அளவிற்கு இலவசங்களை அள்ளி விட்டார். புதிதாக பார்ப்பவர்கள் எதோ கிண்டலுக்கு கூறி இருப்பார்கள் என்று நினைக்கும் அளவிற்கு இருந்தது. கலைஞர் கடந்த தேர்தல் வாக்குறுதியில் அறிவித்ததை ஏறக்குறைய நிறைவேற்றி இருந்தது அவருக்கு கூடுதல் பலம். இவர்கள் இருவரும் அறிவித்த இலவசங்களை வட மாநில ஊடகங்கள் கிண்டல் செய்து நமது மாநிலத்தின் மானத்தையே வாங்கி விட்டன.
உள்ளே விஜயகாந்த் வெளியே வைகோ
கடந்த தேர்தலில் தற்போது ஜெ செய்ததைப்போல (இல்லாமல் நாகரீகமாக) கலைஞரும் வைகோவிற்கு “இதயத்தில்” மட்டுமே இடம் கொடுத்ததால் அங்கே இருந்து விலகி ஜெ அளித்த தொகுதிகளைப் பெற்றுக்கொண்டு அதிமுக கூட்டணியில் இணைந்தார். இணைந்ததோடு ஜெ செய்த அராஜகத்தை எல்லாம் பொறுத்துக்கொண்டு அமைதி காத்தார். ஜெ க்கு யாருமே துணை இல்லாத போது அவருக்கு பக்க பலமாக இருந்தார் குறிப்பாக ஈழப்பிரச்சனை ஏற்பட்ட போது கூட சமாளித்து வந்தார் காரணம் ஈழத் தமிழர்கள் விசயத்தில் ஜெ முன்பு என்ன பேசினார் பின் எப்படி பல்டி அடித்தார் அனைவரும் அறிந்தது. இப்படி எந்த சூழ்நிலையிலும் பிரியாமல் இருந்த வைகோ வை படு கேவலமாக நடத்தி வெளியே அனுப்பினார் (வைகோ விற்கு இது தேவை தான் என்பது சிலர் வாதம்). அவர் கேட்ட சீட்டை கொடுக்காததோடு காக்க வைத்து வேறு கூட்டணியிலும் இணைய முடியாமல் செய்து விட்டார். இதன் பிறகு விஜயகாந்த் பல வித போராட்டங்கள் சண்டைகளுக்கிடையே 41 சீட்டைப் பெற்றார். பல காலம் அரசியலில் இருக்கும் வைகோ தற்போது வந்த விஜயகாந்துடன் போட்டி முடியாதது வருத்தமளிக்கும் விஷயம்.
வைகோவை வெளியேற்றியது ஜெ க்கு பலமா பலவீனமா?
நிச்சயம் பலவீனம் தான் காரணம் அதிமுக கூட்டணியில் ஜெ வைத் தவிர உறுதியாகப் பேச நபர் இல்லை. வைகோ இருந்து இருந்தால் மேடைகளில் வெளுத்து வாங்கி இருப்பார். வைகோ ஒரு சிறந்த பேச்சாளர் என்பதை எவரும் மறுக்க முடியாது. தன்னுடைய வாதங்களை அது சரியோ தவறோ ஆணித்தரமாக வைப்பார். கேட்பவர்களை தன் வாதங்களை ஏற்றுக்கொள்ளும்படி அவரது பேச்சு அமைந்து இருக்கும். இது நிச்சயம் அதிமுக கூட்டணிக்கு மிகப்பெரிய பலமாக இருந்து இருக்கும். அதுவுமில்லாமல் வைகோ மீது மற்ற அரசியல்வாதிகள் அளவிற்கு மக்களுக்கு வெறுப்பில்லை. இன்னும் பலர் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இருப்பதில் நல்ல அரசியல்வாதி என்று கூற்றைக்கொண்டுள்ளனர்.
விஜயகாந்த்
Election 4 தமிழக சட்டமன்றத்தேர்தல் 2011 ஒரு விரிவான அலசல்கடவுளுடன், மக்களுடன் மட்டுமே கூட்டணி என்று கூறிக்கொண்டு இருந்த கேப்டன் பின் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்துக்கொண்டார். இதற்கு தனியாக நின்று வெற்றி பெற முடியாது மற்றும் கட்சி செலவு அதிகம் ஆகிக்கொண்டு செல்வது காரணமாகக் கூறப்படுகிறது. கூட்டணிக்கு முன்பு கேப்டனை ஜெ குடிகாரர் என்றும் அவர் தான் எனக்கு ஊத்திக்கொடுத்தார் என்று விஜயகாந்தும் கேவலமாக சண்டை இட்டுக்கொண்டார்கள். கேப்டன் குடிகாரர் என்ற பிரச்சனை தேர்தலில் ஆரம்பிக்க பிள்ளையார் சுழி போட்டதே ஜெ தான் என்று நினைக்கிறேன்.
குழப்பமான அதிமுக வேட்பாளர் அறிவிப்பு
ஜெ கூட்டணி கட்சிகள் யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக வேட்பாளர் அறிவிப்பை வெளியிட்டது கூட்டணி கட்சிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி விட்டது. இதனால் கூட்டணியை முறித்து மூன்றாவது அணி அமைக்கும் அளவிற்கு சென்று விட்டது. ஜெ அறிவிப்பைப் பார்த்து அதிமுக தொண்டர்களே மிரண்டு விட்டனர் மற்றவர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். பின்னர் விஷயம் விபரீதம் ஆவதை உணர்ந்த அதிமுக முக்கிய தலைகள் ஜெ விடம் பேசி பின் கூட்டணிக்கட்சிகளை சமாதானப்படுத்தினர். இது மக்களிடையே ஜெ மீது ஒரு வெறுப்பை கொண்டு வந்தது. ஜெ இன்னும் திருந்தவே இல்லை என்பதை நிரூபிப்பது போல இருந்தது.
ஜெ க்கு விஜயகாந்த் பலமா? பலவீனமா?
கூட்டணிக்கு முன்பு என்றால் நிச்சயம் பலம் மட்டுமே என்று கூறி இருக்கலாம் ஆனால் தற்போது கேப்டன் செய்த பல சொதப்பல்கள் பலம் + பலவீனம் என்று கூறும் அளவிற்கு வந்து விட்டது. சென்ற தேர்தலில் மிகச்சிறப்பாக பிரச்சாரம் செய்து 8% வாக்குகளைப் பெற்றவரா இவர்! என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு இவரது பல நடவடிக்கைகள் இருந்தன.
வேட்பாளரை அடித்ததாக எழுந்த சர்ச்சையை அதோடு விடாமல் நான் அடித்தால் மகாராஜா ஆவார் என்று கூறி மேலும் சொதப்பியது, அதிமுகவையே தவறுதலாக விமர்சித்தது, அதிமுக, விஜய் மக்கள் கட்சி நபர்களிடம் கடுமையாக நடந்து கொண்டது என்று ரொம்பவும் சொதப்பி விட்டார். இவர் பேசாமல் இருந்தாலே போதும் என்கிற அளவிற்கு சில நேரங்களில் ஆனது. இருப்பினும் ஜெ க்கு பிறகு அவரது கூட்டணியில் விஜயகாந்த் பேச்சிற்கே அதிக வரவேற்பு இருந்தது. இந்த சொதப்பல்களை தவிர்த்து இருந்தால் மேலும் பல வாக்குகளைப் பெற்று இருக்கலாம். இதற்கு முழுக்காரணமே விஜயகாந்த் தான் வேறு யாருமல்ல. விஜயகாந்த் செல்லும் இடங்கள் எல்லாம் திமுக கூட்டணி கட்சிக்காரர்கள் பேசுவதை விட அதிகமாக கேப்டன் பேசுவதை கவர் செய்து ஒன்றுமில்லாத விஷயங்களைக்கூட பூதாகரமாகக் கூறி சன் டிவி செய்த டேமேஜ் ம் ஒரு காரணமாகக் கூறலாம்.
விஜயகாந்த் Vs வடிவேல்
Vadivel praise Captain தமிழக சட்டமன்றத்தேர்தல் 2011 ஒரு விரிவான அலசல்இந்தத்தேர்தலில் அறிவிக்கப்படாத ஹீரோ வடிவேல் தான். முதல் முறையாக கலைஞரை வைத்துக்கொண்டு மிகவும் கீழ்த்தரமாக பேசி நடந்து கொண்ட வடிவேல் அதன் பிறகு சுதாரித்து ஒவ்வொரு இடத்தில் பேசும் போதும் கேப்டன் மானத்தையே வாங்கி விட்டார். கேப்டன் இதற்கு எந்தவிதமான பதிலும் அளிக்காததால் அவரை சீண்டும் படி மீண்டும் மீண்டும் அவரை உசுப்பேத்திக்கொண்டே இருந்தார் ஆனாலும் கேப்டன் எதற்கும் பதில் தரவில்லை. வடிவேல் உஷாராக ஜெ வை தாக்காமல் கேப்டனை மட்டுமே தாக்கி வந்தாலும் அதிமுக கூட்டணியை வாரிக்கொண்டு இருந்தார்.
கேப்டனை வடிவேல் போட்டு வாங்கியது ஜெ க்கு நிச்சயம் மகிழ்ச்சியாகத்தான் இருந்து இருக்கும் ஆனால் இவரது கூட்டணியையும் வாரிக்கொண்டு இருந்ததால் பின்னர் இவருக்கு “ஆப்பு” இருக்கலாம் என்று கருதப்படுகிறது. “தண்ணீரில்” மிதப்பவன் எல்லாம் கேப்டன் அல்ல. நீ கிங் மேக்கர் அல்ல ட்ரிங்க் மேக்கர் என்றது பலத்த வரவேற்ப்பை பெற்றது ஆனாலும் பலரும் முகம் சுழிக்கும் வண்ணம் வடிவேல் பேசியது அருவருக்கத்தக்கதாகவே இருந்தது. குறைந்த பட்ச மேடை நாகரீகம் கூட இல்லாமல் வடிவேல் பேசினார். தேமுதிக வாக்கு குறைவில் வடிவேல் பங்கு மிக முக்கியப் பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை. கேப்டனை குடிகாரராகவே சித்தரித்து விட்டதால் பெண்கள் வாக்கு இவருக்கு குறையும் என்றே கருதுகிறேன்.
இதில் பெரிய காமெடி விஜயகாந்த் மாற்றிக்கூறியதை கிண்டலடித்துக்கொண்டு இருந்த வடிவேலுவே மாற்றி அதிமுக வேட்பாளரை ஆதரித்தது தான் ஆனால் தமிழக மக்கள் பெரும்பாலோனோர் சன் மற்றும் கலைஞர் மட்டுமே பார்ப்பதால் இது பற்றி மக்களுக்கு அதிகம் தெரியவில்லை காரணம் இவர்கள் தான் இதை எல்லாம் காட்டவே மாட்டார்களே! வடிவேலை சமாளிக்க அதிமுக தரப்பு நடிகர் சிங்கமுத்தை களம் இறக்கியது ஆனால் வடிவேல் அளவிற்கு ஈடு கொடுக்கமுடியவில்லை.
பெரிய பேச்சாளர்களை எல்லாம் கொண்ட பெருமை வாய்ந்த கட்சியான திமுக தற்போது வடிவேலையும் குஷ்பூவையும் நம்ப வேண்டிய நிலைமைக்குப் போனது மிக மிக பரிதாபமான ஒன்றாகும். சன் கலைஞர் தொலைக்காட்சிகளில் வடிவேல் பேச்சிற்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்பது திமுக விற்கு பலத்த அடியாகும். திறமையான பேச்சாளர்களை திமுக இழந்துவருவதையே இது காட்டுகிறது. எது எப்படியோ இந்தத் தேர்தலில் வடிவேல் தான் “டாக் ஆஃப் தி எலக்சன்” என்பது மறுக்க முடியாத விஷயம்.
தேர்தல் முடிவு வந்த பிறகு விஜயகாந்த் கூட்டணியில் இருந்து விலக்கப்படுவார் அல்லது விலகும் படியான சூழ்நிலை அவருக்கு அமைக்கப்படலாம் என்பது என் கருத்து. இதை கேப்டனும் நன்கு அறிந்து வைத்து இருப்பார் என்று நினைக்கிறேன். அதிமுக கூட்டணியில் மானத்தோடு எவரும் இருக்க முடியாது என்பது அனைவரும் அறிந்தது. அதுக்கு முன்னாடி இருந்ததா? என்று கேட்க வேண்டாம் என்னிடம் பதில் இல்லை icon smile தமிழக சட்டமன்றத்தேர்தல் 2011 ஒரு விரிவான அலசல்
வடிவேலு குறித்த ஒரு கொசுறு
அரசியலுக்கு வந்து விட்டாலே நடிப்பு வாழ்க்கை அவ்வளவு தான். முன்பு போல ஜொலிக்க முடியாது. இதற்கு உதாரணமாக எத்தனையோ நடிக நடிகைகளைக் கூறலாம். கட்சி சார்பாகி விட்டாலே வாய்ப்பு கொடுக்க மற்றவர்கள் யோசிப்பார்கள் அதோடு அவர்களுடைய இயல்பான நடிப்பிலும் மாற்றம் வந்து விடும். திமுக வெற்றி பெற்று விட்டால் வடிவேலுக்கு பெரிய அளவில் பிரச்சனை இருக்காது அதிமுக வெற்றி பெற்றால் ஒருவேளை நிஜமாகவே “கைப்புள்ளை” ஆனாலும் ஆகி விடுவார். விடுடா விடுடா சுனா பானான்னுட்டு வடிவேல் போக வேண்டியது தான் icon smile தமிழக சட்டமன்றத்தேர்தல் 2011 ஒரு விரிவான அலசல்
ஊடக மூளைச்சலவை
அனைத்து கட்சிகளும் ஆளாளுக்கு ஒரு தொலைக்காட்சியை வைத்து இருந்தாலும் மக்களிடையே சென்றடைவது சன் கலைஞர் மற்றும் ஜெயா தொலைக்காட்சிகள் தான். ஜெயா தொலைக்காட்சியை ஜெயா ஆதரவு மக்கள் மட்டும் தான் காண்கிறார்கள் பொதுமக்கள் அதிகம் பார்ப்பதில்லை. சன் கலைஞர் இரு தொலைக்காட்சிகளும் இந்த ஒரு மாதமும் நாட்டில் வேறு எதுவுமே நடக்காதது போல வெறும் திமுக ஆதரவு செய்திகளாகவே காண்பித்துக்கொண்டு இருந்தார்கள். இந்த இரு தொலைக்காட்சியையும் (உடன் தினகரன் செய்தித்தாள்) பார்ப்பவர்கள் நாட்டில் இவர்கள் கூறுவது மட்டுமே நடந்து கொண்டுள்ளது என்று நினைக்கும் அளவிற்கு நடந்து கொண்டனர். கலைஞர் அரசு மீது வெறுப்பில் உள்ளவர்கள் இதை தொடர்ந்து பார்த்தால் கூட திமுக ஆதரவு அல்லது எதிர்க்கட்சி எதிர்ப்பு நிலைக்கு மாறி விடுவார்கள் அந்த அளவிற்கு மூளைச்சலவை செய்தார்கள்.
கிராமங்களில் எல்லாம் இவர்கள் கூறுவதே உண்மை என்று நம்பும் அளவிற்கு இருந்தது. நான் ஊரில் உள்ளவர்களுடன் பேசியதிலேயே இது அப்பட்டமாக தெரிந்தது. குறிப்பாக சன் தொலைக்காட்சியில் என்ன கூறுகிறார்களோ அது தான் இவர்களுக்கு செய்தி அதைத்தவிர வேறு எதுவும் நடக்கவில்லை என்பதைப்போலவே இருந்தது சிலரின் பேச்சு.
ஊடகங்கள் அரசியல் கட்சிகள் கையில் இருந்தால் என்ன நடக்கும் என்பதற்கு தமிழகம் ஒரு சிறந்த உதாரணம்.
தேர்தல் ஆணையம்
Election2 தமிழக சட்டமன்றத்தேர்தல் 2011 ஒரு விரிவான அலசல்அரசியல் கட்சிகளிடையே வடிவேல் என்றால் பொதுமக்களிடையே பட்டையக் கிளப்பியது தேர்தல் ஆணையம் தான் என்பதில் சந்தேகமில்லை. பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்க கடும் சோதனைகளை மேற்கொண்டனர். கொடி, பேனர், தோரணம், கட் அவுட் என்று எதையும் வைக்கக்கூடாது என்று ஏகக் கெடுபிடிகளை வைத்து அரசியல் கட்சிகளை கலங்கடித்து விட்டனர். அரசியல் கட்சிகள் தாங்கள் நினைத்ததை சாதிக்க கடும் முயற்சிகளை மேற்க்கொள்ள வேண்டி இருந்தது.
வாகன சோதனையாலும் மற்றும் மற்ற கெடுபிடிகளாலும் பொதுமக்கள் பலர் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இத்தனை பெரிய மக்கள் தொகை கொண்ட மாநிலத்தில் இதைப்போல சிரமங்கள் தவிர்க்க முடியாது என்பது என்னுடைய கருத்து. அரசியல் கட்சிகள் செய்யும் அட்டூழியத்தை அடக்க மக்கள் ஒரு மாதம் பொறுத்துக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.
பொது மக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தி மற்றும் மற்ற தொண்டு நிறுவனங்கள், ஊடகங்கள் உதவியுடன் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி இந்த முறை 77.8% வாக்கு சதவீதத்தை நடத்தி சாதனை செய்துள்ளார்கள். மக்களும் எந்த பிரச்சனையும் நடக்காது என்கிற நம்பிக்கையில் கூட்டம் கூட்டமாக வந்து வாக்களித்தனர். இதில் குறிப்பிடத்தக்க இன்னொரு விஷயம் எப்போதும் வாக்களிக்காமல் இருக்கும் மேல்தட்டு மக்களும் வந்து வாக்களித்தது ஆகும்.
எனக்கு தேர்தல் கமிசன் செய்ததில் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனது முடிவை ஒரு மாதம் தள்ளி வைத்ததாகும். கலைஞர் தேர்தல் ஆணையத்தை எமர்ஜென்சி போல நடந்து கொள்கிறது என்று கூறிய போதெல்லாம் எரிச்சல் தான் வந்தது ஆனால் இந்த இடைவெளி ஒரு மாதம் விசயத்தில் கலைஞர் கூறியதில் எனக்கு முழு உடன்பாடு அதாவது இந்த மாதம் மாநில அரசு எதுவுமே முழுமையாக செய்ய முடியாது அனைத்தும் தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். இது பற்றி தினமணி கூட தனது தலையங்கத்தில் கூறி இருந்தது.
இது தவிர்த்து எனக்கு தோன்றிய இன்னொரு விஷயம் ஒரு மாதத்திற்கு 25000 காவலர்கள் இதற்கு காவல் காக்கிறார்கள். இவர்களுக்கு ஆகும் செலவு நேர விரயம் எல்லாம் கணக்குப் போட்டுப் பார்த்தால் வீண் செலவாகவே தோன்றுகிறது. இதை சரியான முறையில் திட்டமிட்டு ஒரு மாத இடைவெளியை குறைத்து இருக்கலாம். இது போக ஒரு மணி நேர வாக்குப்பதிவு நேரத்தை குறைக்காமல் வழக்கமான நேரத்தையே வைத்து இருந்தால் இன்னும் கூடுதலாக வாக்கு சதவீதம் வந்து இருக்கும். மற்றபடி இவை தவிர்த்து தேர்தல் ஆணையம் மிகச்சிறப்பாக செயல்பட்டு பொது மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது என்பது மிகையில்லை. என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள்.
குழப்பத்தை ஏற்படுத்தும் வாக்கு சதவீதம்
எந்த ஆண்டும் இல்லாமல் இந்த ஆண்டு அதிக வாக்காளர்கள் 77.8% வாக்களித்து இருப்பது அரசியல் கட்சிகளிடையே கடும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது யாருக்கு ஆதரவான அல்லது எதிரான அலை என்று ஒன்றும் புரியாமல் குழம்பிப் போய் உள்ளனர். இதில் நக்கீரன் மற்றும் விகடனின் கருத்துக்கணிப்பு அனைவரையும் குழப்பியுள்ளது. பின்வரும் கணக்கை பார்த்தால் உங்களால் ஏதாவது ஒரு முடிவிற்கு வர முடியுமா!
அதிமுக 141-திமுக 92 இடங்களில் முன்னிலை – ஜூ.வி
திமுக 140-அதிமுக 94 இடங்களில் முன்னிலை – நக்கீரன்
இவை அல்லாமல் பெண்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர். இது விலைவாசி உயர்வு போன்றவற்றால் அதிமுகவிற்கு ஆதரவான கூட்டமா! அல்லது இலவசங்கள் மற்றும் சுயஉதவிக்குழு போன்றவற்றால் திமுகவிற்கு ஆதரவான கூட்டமா! என்று ஒரு முடிவிற்கு வர முடியாத அளவிற்கு உள்ளது. கவுண்டர் பாணியில் சொல்வதென்றால் ஒரே குழப்ப்ப்பமா இருக்கே! icon smile தமிழக சட்டமன்றத்தேர்தல் 2011 ஒரு விரிவான அலசல்
வடிவேல் மற்றும் சன் டிவி கைங்கர்யத்தால் கேப்டன் குடிகாரன் என்பதும், வேட்பாளரை அடித்ததும் மக்களிடையே குறிப்பாக பெண்களிடையே ஆழமாக பதிந்து விட்டது அதனால் இவருக்கு பெண்கள் ஒட்டு அதிகளவில் கிடைக்குமா என்று தெரியவில்லை. இவருடைய ரிஷிவந்தியம் தொகுதியில் 78% வாக்கு பதிவு இதில் ஆண்களை விட பெண்கள் (12,475) அதிகம். இதையும் மீறி கேப்டன் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் கேப்டன் உண்மையிலேயே திறமையான கேப்டன் தான் icon smile தமிழக சட்டமன்றத்தேர்தல் 2011 ஒரு விரிவான அலசல்
இதுவரை நடந்த தேர்தல்களில் 84 ம் ஆண்டு முதல் திமுக அதிமுக மாறி மாறி வந்துள்ளன. வெற்றி பெற்ற கட்சியும் அதன் வாக்கு சதவீதமும் கீழே உள்ளது.
1984 – 73.47% அதிமுக வெற்றி
1989 – 69.69% திமுக வெற்றி
1991 – 63.84% அதிமுக வெற்றி
1996 – 66.95% திமுக வெற்றி
2001 – 59.07% அதிமுக வெற்றி
2006 – 70.56% திமுக வெற்றி
2011 – 77.8% ?????? வெற்றி
கொசுறு: எங்கள் ஊர் கோபியில் இந்த முறை 83.29% வாக்கு பதிந்துள்ளது.
அதிகளவு வாக்களிப்பிற்குக் காரணம் என்ன?
ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணங்களை நினைத்து இருப்பார்கள். எனக்கு தோன்றியவை படத்துடன் கூடிய பூத் ஸ்லிப், காவல் துறை பாதுகாப்பு, தேர்தல் ஆணையம் சமூக அமைப்புகள் ஊடகங்கள் ஆகியவை ஏற்படுத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தேர்தல் ஆணையம் ஏற்படுத்திய நம்பிக்கை, கூடுதல் வாக்காளர்கள் சேர்ப்பு, கள்ள ஓட்டு தவிர்ப்பு, வன்முறை சம்பவங்கள் நடக்காதது, இளைஞர்கள் பலரிடையே இணையம் மூலம் (facebook, Twitter, Buzz & Mail) ஆர்வத்தை ஏற்படுத்தியது போன்றவை. இவை தவிர அரசியல் கட்சிகள் வழங்கிய பணம் மற்றும் இலவசம்.
கலைஞர் ஜெ யார் வெற்றி பெறுவார்கள்?
கணிப்பது மிகவும் கடினமான ஒன்றாகவே உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நடந்த தேர்தல்களிலேயே இந்தத்தேர்தலில் தான் அதிக பட்சமாக வாக்குபதிவு நடந்துள்ளது. இது அனைத்து கட்சிகளின் வயிற்றிலும் புரளியைக் கரைத்துள்ளது. இரு கட்சிக்காரர்களும் தங்களுக்கு ஆதரவான விசயங்களைக் கோடிட்டுக் காட்டி “வெற்றி எங்களுக்குத்தான்” என்று கூறிக்கொண்டு இருந்தாலும் உள்ளூர பயந்து கொண்டு தான் இருக்கிறார்கள். எனக்கு தெரிந்த காரணங்களைப் பட்டியலிட்டுள்ளேன் உங்கள் கருத்துக்களுடன் ஒப்பிட்டுக்கொள்ளுங்கள்.
கலைஞர் சாதகங்கள்
இலவசம், 108, கலைஞர் காப்பீட்டுத் திட்டம், கூட்டுறவுக் கடன் தள்ளுபடி, இலவச வீடு, மகளிர் சுய உதவிக்குழு, ஒரு ரூபாய் அரிசி, அரசு ஊழியர்கள் ஆதரவு, தேர்தல் பணம், வடிவேல்!!!, சன் டிவி, விஜயகாந்த் பேச்சு, ஜெ முதல் வேட்பாளர் பட்டியல் சொதப்பல், ஜெ விஜயகாந்த் சண்டை.
கலைஞர் பாதகங்கள்
Election தமிழக சட்டமன்றத்தேர்தல் 2011 ஒரு விரிவான அலசல்ஊழல், விலைவாசி உயர்வு, மின்வெட்டு, குடும்ப ஆட்சி, திரைப்படத்துறை ரியல் எஸ்டேட் ஊடகத்துறை கேபிள் டிவி ஆதிக்கம், ஈழத்தமிழர் (50% – 50%), மீனவர் பிரச்சனை, அன்னா ஹசாரேவிற்கு ஆதரவாக எந்த பெரிய விளம்பரமும் இல்லாமல் ஊழலுக்கு எதிராக கோவையில் திரண்ட மக்கள்.
ஜெ சாதகங்கள்
இலவசம், கேப்டன் மற்றும் கூட்டணி, ஆளும் கட்சி அதிருப்தி மற்றும் கலைஞர் பாதகங்களில் உள்ளவைகள்
ஜெ பாதகங்கள்
வேட்பாளர் குழப்படி வெளியீடல், கூட்டணி ஒற்றுமை இல்லாமை, விஜயகாந்த் பேச்சு மற்றும் வேட்பாளரை அடித்தது, ஜெ வின் முரட்டுத்தனம், வைகோ (பேச்சு) இல்லாமை, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒன்றாக மேடையில் பேசாதது, ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பிரச்சாரத்தில் மக்களிடம் சரியாக எடுத்துக் கூறாதது.
கலைஞர் ஜெ இருவரிடமும் உள்ள மிகப்பெரிய தவறாக எனக்குத் தோன்றுவது
கலைஞர் முதலில் ஐடி துறையை பெறவும் கடைசியில் கூட்டணி பேரத்திற்க்காகவும் கூட்டணியில் இருந்து விலகுவதாக மிரட்டியதை ஈழத்தமிழர்கள் விசயத்திற்காக செய்யாதது. இது மட்டுமல்ல வேறு எந்த நல்ல விசயத்திற்க்காகவும் செய்யாதது.
ஜெ இன்னும் கொஞ்சம் கூட திருந்தாமல் அப்படியே இருப்பது.
ஒரு மாதக்கலக்கம்
Election3 தமிழக சட்டமன்றத்தேர்தல் 2011 ஒரு விரிவான அலசல்அரசியல் கட்சிகள் இந்த ஒரு மாதக்கொடுமையைப் போல வேறு எப்போதும் அனுபவித்து இருக்க மாட்டார்கள். வெற்றியோ தோல்வியோ முடிவு தெரிந்து விட்டால் நிம்மதியாக அடுத்த வேலையைப் பார்க்கச் சென்று விடலாம் ஆனால் இதில் எதுவுமே தெரியாமல் ஆளாளுக்கு கூறும் ஊகங்களைக் கேட்டு வாய்ப்புள்ளதா இல்லையா என்று தினமும் கணக்குப் போட்டுக்கொண்டு தேர்தலுக்கு முன்பு ஒரு நாளை ஒரு மணி நேரமாகக் கடத்தியவர்கள் தற்போது ஒரு நாளை ஒரு மாதம் போல கடத்த வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு ஆளாகி விட்டார்கள் icon smile தமிழக சட்டமன்றத்தேர்தல் 2011 ஒரு விரிவான அலசல் உண்மையிலேயே இது கொடுமை தான்.
தினமும் இவர்களால் நிம்மதியாக தூங்கக்கூட முடியாது (தெரிந்தவுடன் பொதுமக்கள் நிம்மதியாக இருக்க முடியாது அது வேறு விஷயம்) அந்த அளவிற்கு டென்ஷன் ஆகிக்கொண்டு இருக்கிறார்கள். சாதாரண பொதுமக்களாகிய நமக்கே இவ்வளவு ஆர்வம் என்றால் கட்சிக்காரர்களை எல்லாம் நினைத்துப்பாருங்கள். காமெடிதான் போங்க! சரியான தண்டனை icon smile தமிழக சட்டமன்றத்தேர்தல் 2011 ஒரு விரிவான அலசல்
இதில் பல கட்சிக்காரர்கள் அழகரி ஸ்டாலின் கேப்டன் சரத் போன்றவர்கள் தாங்கள் இத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கூறிக்கொண்டு இருக்கிறார்கள். கலைஞரும் ஜெவும் உஷாராக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறுவோம் என்று கூறிக்கொண்டு இருக்கிறார்கள். தேர்தல் முடிவிற்குப் பிறகு யார் யார் கூறியது என்ன அளவில் உள்ளது என்பதைப் பார்த்தால் காமெடியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
அதோடு ஒவ்வொரு ஊடகங்களும் ஒவ்வொரு கட்சிக்கு ஆதரவாக ஏகத்துக்கும் செய்திகளை எழுதிக்கொண்டு இருக்கின்றன அவர்கள் எல்லாம் தேர்தல் முடிவு மாறி வந்தால் சமாளிக்கப்போவதை நினைத்தாலே சிரிப்பாக உள்ளது அதே போல அவர்கள் கூறியது போல நடந்து விட்டால் பாதிக்கப்படும் கட்சிகள் நிலை பாவமோ பாவம். கொஞ்ச நாளைக்கு வறுத்தெடுத்து விடுவார்கள் icon smile தமிழக சட்டமன்றத்தேர்தல் 2011 ஒரு விரிவான அலசல்
எப்படியோ பல வித சர்ச்சைகள் இருந்தாலும் தேர்தல் நல்லபடியாக முடிந்து விட்டது எந்த வித பெரிய அசம்பாவிதமுமில்லாமல். அனைவரையும் போல நானும் யார் வெற்றி பெறுவார்கள்? கூட்டணி ஆட்சி நடக்குமா? மறுபடியும் மைனாரிட்டி அரசு கோஷங்கள் ஒலிக்குமா? தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பார்களா? என்று ஆவலுடன் இருக்கிறேன். இந்தத்தேர்தல் முடிவு பல வித சந்தேகங்களை தீர்க்கும் பல ஆச்சர்யங்களை மற்றும் நிச்சயம் கடும் அதிர்ச்சியைக் கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
தேர்தல் முடிவால் நம்மிடம் எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லை Life will be going on as usual icon smile தமிழக சட்டமன்றத்தேர்தல் 2011 ஒரு விரிவான அலசல்

No comments:

Post a Comment